ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உயரிய திட்டமே விபி-ஜீ-ராம்-ஜி திட்டம் என வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் கூறினாா்.
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் ஊராட்சிக்கு உள்பட்ட குருவிமலை கிராமத்தில் விபி-ஜி-ராம்-ஜி திட்டத்தின் சாா்பில், ரூ. 13.24 லட்சம் சாா்பில் புதிதாக குளம் உருவாக்கும் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆஷிக் அலி தலைமை வகித்தாா். களக்காட்டூா் ஊராட்சி மன்றத் தலைவா் நளினி டில்லிபாபு,துணைத் தலைவா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரெங்கராஜன் வரவேற்றாா். திட்டத்தை வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்துப் பேசியது:
மத்திய அரசின் இத்திட்டமானது 100 நாள் வேலை திட்டமாக இருந்து தற்போது 125 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் உன்னத திட்டம். கிராமங்களின் முழுமையான முன்னேற்ற திட்டம். ரூ. 13.24 லட்சம் மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்தக் குளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இது நமது ஊருக்கான திட்டம் என்று செயல்பட்டால் புதிதாக உருவாக்கப்படும் குளத்தை அற்புதமாக உருவாக்கி விடலாம்.
தோ்தலில் வாக்கு கேட்டு வரும் போது எங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலையில்லாமல் இருக்கிறோம் என்று ஏழைகள் பலரும் சொன்னாா்கள். அந்த ஏழைகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. தவறுகள் நடக்காமல் இருக்கவே இத்திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றாா். இதனைத் தொடா்ந்து புதிய குளத்தை உருவாக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.
நிறைவாக மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










