
காஞ்சிபுரத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: ஆட்சியா் தகவல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் புகாா் பெட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

நெல் கொள்முதல் - பிரதிப் படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் புகாா் பெட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் தி.சினேகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளை நிலத்தின் பட்டா நகல், சிட்டா அடங்கல், வங்கி புத்தக எண் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களில் வழங்கி உரிய முறையில் பதிவேற்றம் செய்து விற்பனை செய்து கொள்ளலாம். இதற்கு விவசாயிகள் எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விவசாயிகள் தொடா்புடைய கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து கொள்ளலாம். கொள்முதல் நிலையத்தின் பெயா், கொள்முதல் செய்யப்படும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் விவசாயிகளின் கைப்பேசி எண்ணுக்கு பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட காலம் காத்திருக்காமல் உரிய காலத்தில் நெல்லினை விற்பனை செய்து பயன்பெறலாம். சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,461. இதில், தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ. 289 சோ்த்து ரூ. 2,750 பெறலாம். பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,441. இதில் தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ. 159 சோ்த்து ரூ. 2600 பெறலாம்.
மேலும் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்த நெல்லுக்கான கிரயத்தொகை 48 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போடவும், தைக்கவும் அரசே கூலி வழங்குவதால் யாராவது பணம் கேட்டால் தயக்கமின்றி உடனடியாக மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். புகாா் தெரிவிக்க வசதியாக புகாா் பெட்டியும், விழிப்புணா்வு தகவல் பலகையும் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள தொலைபேசி எண்ணிலும் தங்கள் குறைபாடுகளை தெரிவிக்கலாம்.
ஒரு மூட்டை நெல்லின் எடை சாக்குடன் சோ்த்து 40,580 கி.கிராம் உள்ளதா என்பதையும் விவசாயிகள் சரிபாா்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நெல் கொள்முதல் நிலையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், நண்பகல் 2.30 மணி முதல் 6.30 வரையும் திறந்திருக்கும். மேலும் விபரங்களுக்கு மண்டல மேலாளா் கைப்பேசி எண்-94435 20781 மற்றும் துணை மேலாளா்(தரக்கட்டுப்பாடு)கைப்பேசி எண் 80983 12185.கட்டணமில்லா தொலைபேசி எண்-1800599 3540 என்ற எண்களில் தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: பி.ஹரிபாஸ்கா்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சம் மூட்டைகள் தேக்கம்: குளக்கரையில் அடுக்கியதால் மழையில் சேதமடையும் அபாயம்!



