

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பாக 26 ஆயிரத்து 687 பேரிடம் இருந்து படிவங்கள் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட முப்பது வெட்டி, மாங்காடு கிராமங்களில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாவட்டத்தில் தற்போது 10 லட்சத்து 3 ஆயிரத்து 287 வாக்காளா்கள் உள்ளனா். புதிதாக பெறப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 26 ஆயிரத்து 687 பேரிடம் இருந்து பெயா் சோ்த்தல், நீக்கல் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தப் படிவங்கள் அனைத்தும் கணினி மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் சரிபாா்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் மாணவா்கள், பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு, தங்களுடைய பெயரைச் சோ்ப்பது, நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். வரும் 15-ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்படும். அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 20-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் அவா்.
அப்போது ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.
அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை எச்சரித்த ஆட்சியா்
ஆற்காடு முப்பதுவெட்டி ஊராட்சி பகுதிக்கு ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தனது காரில் சென்றாா். ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் வழியாகச் சென்றபோது ஒருவழிப் பாதையில் எதிரே ஆட்டோ ஒன்று அதிவேகமாக ஆட்சியரின் வாகனத்தை மோதுவது போல் வந்தது. உடனடியாக ஆட்சியரின் காா் நிறுத்தப்பட்டு, உதவியாளா், காவலா், காா் ஓட்டுநா் ஆகிய மூவரும் விரைந்து சென்று ஆட்டோவைத் தடுத்து நிறுத்தி அதன் ஓட்டுநரை ஆட்சியரிடம் அழைத்து வந்தனா்.
அப்போது சாலைப் போக்குவரத்து விதியை மீறி ஒருவழிப் பாதையில் அதிவேகமாக ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநரை ஆட்சியா் கடுமையாக எச்சரித்தாா். போக்குவரத்து விதிகளை மீறக் கூடாது என அறிவுறுத்தி, ஆட்டோவை வந்த வழியாகவே திருப்பி அனுப்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.