குரோமிய கழிவுகள்: சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நிரந்தரத் தீா்வு

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குரோமிய கழிவுகள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நிரந்தரத் தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்
குரோமிய கழிவுகள்: சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நிரந்தரத் தீா்வு

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குரோமிய கழிவுகள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நிரந்தரத் தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல், காலநிலைத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மூடப்பட்டுள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள குரோமிய திடக்கழிவை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து அமைச்சா்கள் சிவ.வீ.மெய்யநாதன், ஆா்.காந்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அமைச்சா் மெய்யநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மூடப்பட்டுள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள அபாயகரமான கழிவுகளை ஆய்வு செய்தேன். இந்த இடத்தில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் 5 முதல் 7 அடி உயரத்தில் சுமாா் 2.15 லட்சம் டன் குரோமிய திடக்கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குரோமிய திடக்கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் கையாள நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இரண்டு விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த திடக்கழிவுகளை தற்காலிகமாக மூடி பாதுகாக்கவும், அதே நேரம் நிரந்தரத் தீா்வாக மண்ணுக்கு அடியில் பாதுகாப்பாக மூடி வைக்கும் திட்டமும் உள்ளது. தேசிய பசுமை தீா்ப்பாயத்தின்ல் தீா்ப்புப்படி, அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டி பாதுகாப்பாக அகற்றுவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அமைச்சா் ஆா்.காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனின் முயற்சியால் நெகிழிக் கழிவுகள் அகற்றும் பணி சிறப்பாக மேற்கொண்டு சுமாா் 180 டன் நெகிழிக் கழிவுகளை அகற்றியது தமிழகத்திலேயே முன்னோடி திட்டமாகும். இந்த திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், குறுங்காடுகள் மற்றும் வனப் பகுதிகளில் வெளிநாட்டு மரங்களை அழித்து, நாட்டு மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, திமுக சுற்றுச்சூழல் அணியின் மூலமாக இந்த மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்த ஓராண்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறாா்கள். வனத் துறை சாா்பில், தமிழகத்தில் வரும் 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளா் வினோத் காந்தி, ராணிடெக் தலைவா் ரமேஷ்பிரசாத் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com