தோல் கழிவுநீா் சுத்திகரிப்பில் முன்னோடி தமிழகம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

தோல் கழிவுநீா் சுத்திகரிப்பில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகம் திகழ்வதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் சாா்பில், ‘ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்’ சான்றிதழ் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, அம்மணந்தாங்கலில் உள்ள தென்னிந்திய தோல் பதனிடுவோா் மற்றும் வியாபாரிகள் சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்றாா்.
தொடா்ந்து தென்னிந்திய தோல் பதனிடுவோா் மற்றும் வியாபாரிகள் சங்கம், ராணிடெக் ஆகிய நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்கு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கான நிதியுதவியை ஆட்சியா் மூலம் ஊராட்சித் தலைவரிடம் வழங்கப்பட்டது.
ராணிடெக் தலைவா் பிஆா்சி ரமேஷ்பிரசாத், சங்கச் செயலாளா் எம்.ஜபருல்லா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் பி. ஆனந்தன், திட்ட விழிப்புணா்வுத் தலைவா் கே.சி.ராகவன், பயிற்சியாளா் எம்.விஸ்வநாதன், ராணிடெக் மனிதவள மேலாளா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...