ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சிகளில் குப்பைகள் சேகரிக்க ரூ. 68.58 லட்சம் மதிப்பிலான 27 மின்கல வண்டிகளை வழங்கி தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சிகளில் குப்பைகள் சேகரிக்க ரூ. 68.58 லட்சம் மதிப்பிலான 27 மின்கல வண்டிகளை வழங்கி தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.

ராணிப்பேட்டை: குப்பைகள் சேகரிக்க ரூ. 68 லட்சத்தில் 27 மின்கல வண்டிகள்

Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சிகளுக்கு குப்பைகள் சேகரிக்க ரூ. 68.58 லட்சம் மதிப்பிலான 27 மின்கல வண்டிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ், 2023-24-ஆம் ஆண்டுக்கு ஏ.பி.சி. வகைப்பாட்டின் மூலம் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் குப்பைகள் சேகரம் செய்துகொண்டு வருவதற்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் (இ - காா்ட்) குப்பை வண்டிகள் கொள்முதல் செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், கிராம ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளின் அளவைப் பொறுத்து ஒரு நடைக்கு குறைந்தபட்சம் 310 கிலோ குப்பைகள் ஏற்றி 60 முதல் 80 கி.மீ. பயணிக்கத்தக்க மின்கல வண்டிகள் கொள்முதல் செய்ய குறிப்புகள் வழங்கப்பட்டன.

மின்கலம் மூலம் இயக்கப்படும் குப்பை பெறும் வண்டிகளை அரசு இணையதள சந்தை பக்கத்தில் விலைப்புள்ளி கோரவும் குறைந்த விலைப்புள்ளிகள் வழங்கிய வேலை உத்தரவு வழங்கப்பட்டு, மொத்த தொகையில் 70 சதவீதம் திட்ட நிதியிலும், 30 சதவீதம் 15-ஆவது நிதிக் குழு மானியத்திலிருந்தும் செலவினம் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, கிராம ஊராட்சியில் தலா 150 வீடுகளுக்கு ஒரு மூன்று சக்கர மிதிவண்டியும், தலா 150 வீடுகளுக்கு ஒரு தள்ளு வண்டியும், தலா 150 வீடுகளுக்கு ஒரு குப்பைத் தொட்டியும், தலா 350 வீடுகளுக்கு ஒரு மின்கல வாகனமும் கொள்முதல் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டம், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரைந்து செயல்படுத்திட 126 மின்கல வண்டிகள் 76 ஊராட்சிகளுக்கு வழங்கிட ரூ. 3.02 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டன. அதன் முதல்கட்டமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளுக்கு குப்பைகள் சேகரம் செய்து கொண்டு வருவதற்கு ஏதுவாக, ரூ. 68.58 லட்சம் மதிப்பீட்டிலான 27 மின்கல வண்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கி தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, வருவாய் கோட்டாட்சியா் இராஜராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், சரவணன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com