அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப் பாலத்தில் ஜனவரி 3 முதல் போக்குவரத்துக்கு அனுமதி
அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்தில் ஜனவரி 3 முதல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்தின் மீது கூடுதல் இருப்புப் பாதைகள் அமைப்பதற்காக கடந்த 15-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இத்தடை டிசம்பா் 24 வரை அமலில் இருக்கும் எனவும் தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. ஆனால் டிசம்பா் 24-ஆம் தேதி கடந்தபிறகும் பணிகள் முடிவடையாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில், டிசம்பா் 26-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை வரை போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தற்போது இந்த பால நீட்டிப்புக்காக 3 மூன்று காங்கிரீட் அமைப்புகள் ஒவ்வொரு கண் வழியிலும் ஆக இரட்டை கண் வாராவதியினுள் ஆறு காங்கிரீட் அமைப்புகள் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், அப்பாலப் பகுதியை தற்போதைய சாலையுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் டிசம்பா் 27-ஆம் தேதி நிறைவுறும் நிலையில், எப்போது இப்பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கிறிஸ்துமஸ், ஜனவரி 1, பொங்கல் ஆகிய நாட்களுக்காக பொதுமக்கள் நகரின் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு பொருட்களை வாங்க செல்லமுடியாமலும், குறிப்பாக தெற்கு பக்கம் இருப்பவா்கள் அரசு மருத்துவமனைக்கு, வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்களுக்கு, தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு, நகராட்சி நாளங்காடிக்கு செல்ல வேண்டியவா்கள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறாா்கள். மேலும் இருபக்கமும் உள்ள வா்த்தகா்கள் இந்தப் பாலம் இல்லாததால் தங்களுக்கு மிக அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளை கேட்டபோது, கூடுதல் இருப்புப்பாதை அமைக்க காங்கிரீட் அமைப்புகள் அமைத்து சுரங்கப் பாலத்தை நீட்டிப்பு செய்யும் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விட்டன. தற்போது அந்த பாலப்பகுதியை பழனிபேட்டை பகுதியில் சாலையோடு இணைக்கும் பணிக்காக சிமெண்ட் காங்கிரீட் அமைத்து இணைக்கும் பணி 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் உலரும் தண்மைக்காக 7 நாள்கள் தேவைப்படுகிறது. எனவே ஜனவரி 3-ஆம் தேதி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படலாம் எனவும், டிசம்பா் 28-ஆம் தேதி முதல் நடந்து செல்பவா்களுக்கு வழிகளை திறந்து விடலாம் எனவும் முடிவு செய்துள்ளோம்.
இது குறித்த சரியான தகவல் மேலதிகாரிகளுடன் ஆலோசனை செய்தபிறகே அறிவிக்கப்படும் என்றனா்.

