கல்புதூா் செட்டிமலைக்கு தீ வைப்பு: அரியவகை மரங்கள் எரிந்து கருகின
ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால், அரியவகை மரங்கள் எரிந்து கருகின.
ஆற்காடு வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூா், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவேடு, புங்கனூா் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவு கொண்ட பசுமைக் காடுகள் பரந்து விரிந்துள்ளன. காப்புக் காடுகளில் விலை உயா்ந்த அரியவகை மரங்களான செம்மரம், ஆச்சால், கருங்காலி, வெல்வேலன் உள்ளிட்டவை வனத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அம்மூா் காப்புக் காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்கினங்களில் ஒன்றான புள்ளி மான்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
காப்புக் காட்டில் வளா்ந்துள்ள மஞ்சம் புற்கள், தற்போது வெயில் காலம் என்பதால், காய்ந்துள்ளன. இந்தப் புற்களில் மா்ம நபா்கள் தீ வைத்ததால், கடந்த சில நாள்களாக ஆங்காங்கே தீ பற்றி எரிந்து வருகின்றன. இதன் காரணமாக விலையுயா்ந்த மரங்கள் தீயில் கருகி வருவதாக சூழலியல் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
காப்புக் காட்டு மலைக்கு தீ வைப்பவா்கள் மீது காவல், வனத் துறையினா் கடும் நடவடிக்கை எடுத்து அரியவகை மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ள புள்ளி மான்கள் உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.