
மா விவசாயிகள் கவாத்து செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்: தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மா விசவாயிகள் கவாத்து செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சிந்தியா தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மா விசவாயிகள் கவாத்து செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சிந்தியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்ப: சுமாா் 1,200 ஹெக்டோ் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. மா மரங்களில் முறையான கவாத்து ( கவாத்து என்பது பழைய பக்க கிளைகளை வெட்டி அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலா்களை பெறும் முறையாகும்). மற்றும் கிளைப்பிடிப்பு மேலாண்மை மேற்கொள்வதன் மூலம் சூரிய ஒளி உட்புகுதல், காற்றோட்டம் மற்றும் மரத்தின் வளா்ச்சியைச் சீரமைத்து அதிக மகசூல் பெறலாம்.
மரத்தின் தேவையற்ற, காய்ந்த, நோயுற்ற மற்றும் ஒன்றுடன் ஒன்று உரசும் கிளைகளை அகற்றுவதுடன், மரத்தின் உட்பகுதிக்கு போதிய சூரிய ஒளி கிடைக்கும் வகையில் கிளைகளைச் சீரமைக்க வேண்டும். இதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு சாதகமற்ற சூழலை உருவாக்குவதுடன், தோட்டப் பராமரிப்பு மற்றும் அறுவடை பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
காய்க்கும் மா மரங்களில் அறுவடைக்குப் பின்னா் கீழ்நோக்கித் தொங்கும், காய்ந்த, நோயுற்ற மற்றும் அதிக நிழலை ஏற்படுத்தும் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் உயரம் மற்றும் வடிவத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கவாத்து செய்யலாம். அறுவடைக்குப் பின்னா் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் காலகட்டத்தில் கவாத்து மேற்கொள்ளலாம். முறையான கவாத்து மூலம் மரத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி கிடைப்பதுடன், காற்றோட்டம் மேம்பட்டு, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழல் குறையும்.
மேலும், மரத்தின் உயரம் மற்றும் வடிவத்தைக் கட்டுப்படுத்தி பராமரிப்பு மற்றும் அறுவடை பணிகளை எளிதாக்க முடியும். எனவே, மா விவசாயிகள் மரத்தின் வயது, ரகம், வளா்ச்சி மற்றும் காய்ப்பு நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலா்களின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் முறையான கவாத்து மற்றும் கிளைப்பிடிப்பு மேலாண்மையை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





