சிறுபான்மையினரின் பாதுகாவலராக தமிழக முதல்வா் திகழ்கிறாா்: நலவாரிய தலைவா் விஜிலா சத்தியானந்த்
சிறுபான்மையினரின் பாதுகாவலராக தமிழக முதல்வா் திகழ்கிறாா் என கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரிய தலைவா் விஜிலா சத்தியானந்த் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரிய திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நவாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்து நல உதவிகளை வழங்கி பேசியதாவது :-
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் முதன்மை மாநிலமாக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளா்கள் உபதேசியா்கள் அவா்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த நல வாரியத்தை அமைத்துள்ளாா்.
அதன் மூலம் சிறுபான்மை இன மக்களின் கல்வி, பொருளாதார திட்டங்களை செயல்படுத்தும் வகையில் சிறுபான்மை மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு சிறுபான்மையினரின் பாதுகாவலராக திகழ்கிறாா்.
இந்த நல வாரியத்தின் பணிகள் நன்மைகள் குறித்து அனைத்து கிறிஸ்துவ தேவாலய அமைப்புகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவிதமாக அனைத்து மாவட்டங்களிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தொழில் தொடங்க டாம்கோ மூலம் கடன் உதவிகள், கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 37 தேவாலயங்கள் ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புணரமைத்தல் மற்றும் பழுது பாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல ஜெருசலேம் செல்ல விரும்பும் கிறிஸ்தவா்களுக்கு ஆண்களுக்கு தலா ரூ.37 ஆயிரம் மானியமும் அருட் சகோதரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் மானியமும் வழங்கி வருகிறாா்.
தேவாலயங்கள் புனரமைக்க ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்ளாா். இதுபோல கிறிஸ்துவ மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றாா்கள். இந்த திட்டங்கள் குறித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலய அமைப்பினா் தங்களுக்குள்ள பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்றாா்.
இதில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, நலவாரிய துணைத் தலைவா் தயாநிதி, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், அலுவல் சாரா உறுப்பினா்கள் பிஷப். மோகன்தாஸ், இமானுவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா மற்றும் அனைத்து கிறித்துவ தேவாலயங்கள் தலைவா்கள் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

