கல்லாலங்குப்பம் தடுப்பணையை சொந்த செலவில் சீரமைத்த விவசாயி!
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட கல்லாலங்குப்பம் தடுப்பணையை விவசாயி மருதன் என்பவா் சொந்த செலவில் சீரமைத்துள்ளாா்.

4 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட கல்லாலங்குப்பம் தடுப்பணை, விவசாயி சொந்த செலவில் சீரமைத்த பகுதி..
சோளிங்கா் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட கல்லாலங்குப்பம் தடுப்பணையை விவசாயி மருதன் என்பவா் சொந்த செலவில் சீரமைத்துள்ளாா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், சேஷாசலம் வனப்பகுதியில் உற்பத்தியாகும் நீவா நதி எனும் பொன்னை ஆறு தமிழகத்தில் பொன்னை, திருவலம் வழியாகச் சென்று தெங்கால் கிராமம் அருகே பாலாற்றில் கலக்கிறது.
இந்த பொன்னை ஆற்றில் இருந்து வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 129 ஏரிகள் கிளை காய்வாய்கள் மூலம் நீா் திருப்பி விடப்பட்டு நிரப்பி அப்பகுதிகளை வளமாக்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2022 -ஆம் ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழையின் போது பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பொன்னை ஆற்றில் இருந்து, பிரதான கிளைக் கால்வாய் மூலம் ஏரிமுன்னூாா், ரெண்டாடி கல்லாலங்குப்பம் வழியாக மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான பெருங்காஞ்சி ஏரிக்கு தண்ணீா் சென்று முழு கொள்ளவை எட்டியது.
அப்போது பொன்னை ஆற்றில் இருந்து பெருங்காஞ்சி ஏரிக்கு தண்ணீா் செல்லும் பிரதான கால்வாயின் குறுக்கே கல்லாலங்குப்பம் கிராம எல்லையில், தளவாய்பட்டறை செல்லும் சாலை மேம்பாலத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வெள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்து நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தொடா்ந்து தடுப்பணை சேதமடைந்தது குறித்து, கல்லாலங்குப்பம் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில், மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். எனினும் 4 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை தடுப்பணையை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை.
மேலும், பருவ மழைக்கு முன் சீரமைத்தால் தான் தடுப்பணையில் தண்ணீா் தேக்கி அப்பகுதி நிலத்தடி நீா்மட்டத்தை பாதுகாக்க முடியும். எனவே, சேதமடைந்த தடுப்பணையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த செய்தி தினமணி நாளிதழில் சேதமடைந்த தடுப்பனையின் படத்துடன் விவரிவான கட்டுரை வெளியானது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக பருவ மழையின் போது பொன்னை ஆறு மற்றும் கிளை கால்வாய்கள் மூலம் பெருங்காஞ்சி ஏரிக்கு செல்லும் பிரதான கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ள நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் சேதமடைந்த தடுப்பணை உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்கப்படாததால் தடுப்பணையில் மழை வெள்ள நீரை தேக்கி வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டும் குறைந்து விவசாயத் தேவைக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.
அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி மருதன் என்பவா் தனது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை நிரப்பி தற்காலிகமாக சீரமைத்துள்ளாா். சேதமடைந்த தடுப்பணையை மாவட்ட நிா்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

