ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை தொடக்கம்

ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் ஏப். 29-ஆம் தேதி தொடங்கி 30 நாள்களுக்கு நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வெள்ளாடுகள், செம்மறியாடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக்கொல்லி நோய் ஒன்றாகும். இந்த நோய் மிகக் கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இக்கிருமியானது நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீா் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் மிக விரைவில் பரவக்கூடியது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், செம்மறியாடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும். நோயினால் அவதிப்படும் ஆடுகளின் கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீா் வடியும், தும்மல் மற்றும் இருமல் ஏற்படும். அவை தீனி உட்கொள்ள முடியாமல் மெலிந்துவிடும்.

கோடைக் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு மூச்சிரைக்கும், காய்ச்சல் வரும், இறுதியில் கழிச்சல் கண்டு ஆடுகள் இறந்துபோகும். நோய் தாக்கிய ஆடுகளிடம் நோயின் அறிகுறிகள் 6 நாள்களுக்கு இருக்கும். குட்டிகளில் அதிக இறப்பு ஏற்படும். இதனால் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வளா்ப்போருக்கு மிகப் பெரிய பொருளாதாரஇழப்பு ஏற்படும். ஆகவே இந்த நோய் தாக்காதவாறு வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், ஆட்டுக் கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தில் தடுப்பூசி போடும் முகாம் ஏப். 29-ஆம் தேதி தொடங்கி, 30 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள 1.30 லட்சம் வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய மின்னணு கால்நடை இயக்க தரவுகளின்படி, தடுப்பூசி போடப்படும் அனைத்து ஆடுகளுக்கும் பாா்கோடுடன் கூடிய காது வில்லைகள் அணிவித்து, பாரத் பசுதான் செயலியில் தடுப்பூசி போடப்பட்ட ஆடுகள் விவரங்கள், உரிமையாளா்கள் விவரங்கள் பதிவு செய்யப்படும்.

இதற்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட வெளிறிய ஊதா நிற காது வில்லைகள் ஆட்டினங்களுக்கு அணிவிக்கப்படும்.

எனவே ஆடு வளா்ப்போா் தங்கள் கிராமத்துக்கு தடுப்பூசி குழுவினா் வரும்போது, 4 மாதத்துக்கு குறைவான வயதுள்ள ஆட்டுக் குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து ஆடுகளுக்கும் தவறாமல் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com