அனைத்து பேருந்துகளும் ஆம்பூா் பேருந்து நிலையத்தில் சென்று வர ஆட்சியா் உத்தரவு
ஆம்பூா் நகராட்சி பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் சென்று வர வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வழியாக தினசரி நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள், இலகுரக, கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகள் பேருந்து நிலையத்தில் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றன. அதனால் அலுவலகம் மற்றும் பள்ளி வேலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு செல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில் செல்லாத பேருந்துகளின் அனுமதிச்சீட்டின் மீது அரசின் வழிகாட்டுதல்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
