கோயில்களில் நகை திருடிய இரு இளைஞா்கள் கைது
வாணியம்பாடி அருகே கோயில்களில் நகை திருடிச் சென்ற 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், அம்பலூா் காவல் ஆய்வாளா் மனோன்மணி தலைமையில், உதவி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கொடையாஞ்சி-அம்பலூா் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 2 இளைஞா்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அப்பகுதியில் உள்ள 2 அம்மன் கோயில்களில் 4 பித்தளை குத்து விளக்குகள், 2 கிராம் தங்க நகை மற்றும் பொருள்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
மேலும், அவா்கள் திருடிச் சென்ற 4 குத்து விளக்குகள் மற்றும் 2 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த சந்திப் (19), அம்பூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
