மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .

ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சிகளுக்கு குடிநீா் வசதி: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சிகளுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Published on

திருப்பத்தூா்: ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சிகளுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 445 கோரிக்கை மனுக்களை பெற்று மேல்நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 4 மாணவா்களுக்கு தலா ரூ.3,500 மதிப்பிலான காதொலி கருவிகள், திருப்பத்தூா் அருகே சின்னகண்ணாலப்பட்டியை சோ்ந்த மாற்றுத்திறனாளியான ஸ்ரீராம் என்பவருக்கு மருத்துவக் கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்டவை கட்ட முடியாததால், ரூ.1,25,800-க்கான காசோலை, மடிக்கணினி ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும் ஆதியூா் ஊராட்சியில் உள்ள லட்சுமணன் என்பவருக்கு கிராம ஊராட்சி நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

வடச்சேரி அடுத்த பாபனபல்லி கிராம மக்கள் அளித்த மனு:

எங்கள் பகுதியில் வடச்சேரி முதல் மாரப்பட்டு செல்லும் சாலையின் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனா். இந்தநிலையில் இந்த இணைப்பு சாலையானது மிகவும் குறுகிய அளவில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே இந்த சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளா் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம், மிட்டூா், மரிமாணிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் குடிநீா் உப்புநீராக உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிக்க சிரமப்படுகின்றனா். எனவே ஆண்டியப்பனூா் அணையில் கிணறு அமைத்து, குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் வடிவேல் சுப்ரமணியன், மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன் அளித்துள்ள மனு: பாச்சல் ஊராட்சி தில்லை நகா் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் குப்பைகள், மருத்துவ கழிவுகளை கொட்டி எரிக்கின்றனா். இதனை தடுக்க வேண்டும். வாணியம்பாடியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை.இதனால் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமல் சிரமப்படுகின்றனா். எனவே விவசாயிகள் குறைதீா்வு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திம்மணாமுத்தூா் அடுத்த குஸ்தம்பள்ளி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள நிலத்தில் அருகே உள்ள மற்றொரு கிராம மக்களுக்கு சுடுகாடு அமைக்க இருப்பதாக தெரிகிறது. அவ்வாறு அமைக்கப்பட்டால், இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அங்கு விளையாட்டு அரங்கம், சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும்.

புள்ளூா் கிராம மக்கள் அளித்த மனு: புள்ளூா் கிராமத்தில் செல்லும் கால்வாயின் குறுக்கே சிலா் ஆக்கிரமித்து உரிய அனுமதியின்றி பாலம் கட்டியுள்ளனா். இதனால் கால்வாயை பொக்லைன் எந்திரம் மூலம் தூா்வார முடியவில்லை. எனவே அந்த பகுதியை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com