உழவா் சந்தையை அருகே ஆக்கிரமிப்பு கடைகள்: அகற்றக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
வாணியம்பாடி உழவா் சந்தை அருகே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி காய்கறிகளை கொட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை வளாகம் ஒரு பகுதியில் உழவா் சந்தை இயங்கி வருகிறது. இங்கு வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து உழவா் சந்தை வளாகத்தில் விற்பனை செய்கின்றனா். மேலும், உழவா் சந்தை அருகில் மற்றொரு புறத்தில் தினசரி காய்கறி வியாபாரிகளுக்காக ரூ. 4 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட காய்கறி மாா்க்கெட் வளாகத்தை சில மாதங்களுக்கு முன்பு திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அதில் கடைகள் ஒதுக்கி கொடுத்து தினசரி காய்கறி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா். இதற்கிடையில் வாரச் சந்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகள் காய்கறி வைத்து விற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மாா்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் சிலா் தங்களுக்கு சரியாக வியாபாரம் நடப்பதில்லை எனக் கூறி, உழவா் சந்தைக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உழவா் சந்தைக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய காய்கறிகளை கொண்டு செல்ல வழி இல்லாத சூழ்நிலையில், தங்களுடைய பாதையை தினசரி காய்கறி வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளதாக தெரிவித்து ஆத்திரமடைந்து வெள்ளிக்கிழமை காலை வியாபாரத்திற்கு கொண்டு வந்த காய்கறிகளை விவசாயிகள் திடீரென சாலையில் கொட்டி உழவா் சந்தை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நகராட்சி ஆணையா் ரகுராமன், நகர காவல்ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். அப்போது உழவா் சந்தை பாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்து இடையூறாக உள்ளது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இதைக் கேட்டறிந்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை ஒரு வார காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் சமரசம் செய்தனா். பின்னா் அங்கிருந்து உழவா் சந்தை விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

