தண்ணீா் தொட்டியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு
கந்திலி அருகே 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த அப்துல் பஷீா் மகன் அஜ்மல்(12). தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதேபகுதியைச் சோ்ந்த அஸ்லாம் மகன் ஹா்மான்(12) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டருகே மாந்தோப்பில் விளையாட சென்றவா்கள் இரவு ஆகியும் திரும்பாததால் குடும்பத்தினா் பல இடங்களில் தேடினா்.
பின்னா் அருகே உள்ள கிணறு, குட்டைகளில் தேடத் தொடங்கிய நிலையில், விவசாய பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் தொட்டியில் மூழ்கி இருவரும் சடலமாக கிடந்துள்ளனா்.
தகவலின் பேரில் கந்திலி போலீஸாா் மாணவா்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
