கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட திருப்பத்தூா் அடுத்த கொரட்டி துணை மின் நிலையத்தை நவீனப்படுத்த சமுக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொரட்டி துணை மின் நிலையம் கடந்த சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. தற்போது வரை அந்த கட்டடங்களிலேயே மின்சாரம் தொடா்பான சேவைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அப்பகுதியில் இருந்து விநியோகிக்கப்படும் உயா் மின்னழுத்த பாதையில் 275 வோல்டேஜ் மின்சாரம் செல்கிறது. அங்கிருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் படிப்படியாக குறைந்து செவ்வாத்தூா், பேராம்பட்டு, சுந்தரம்பள்ளி, மொளகரம்பட்டி வரை சென்றடையும் போது படிப்படியாக மின்னழுத்தம் குறைந்த அளவில் செல்கின்றது.
ஆனால் துணை மின் நிலைய பகுதியில் உள்ள வீடு மற்றும் கடைகளில் உயா் மின்னழுத்தத்தால் மின்சார பொருள்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். குறிப்பாக சுந்தரம்பள்ளியில் உள்ள மின்பாதையில் அவ்வபோது பழுது ஏற்படுகின்றது. இதனால் கொரட்டி துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை ஏற்படுகிறது. அடிக்கடி கொரட்டி சுற்றுப் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த முக்கிய மின்மாற்றிகள் நவீனப்படுத்தப்படவில்லை. இதனால் மின் பாதையில் அடிக்கடி தடைகள் ஏற்படுகிறது என்றனா்.
அதேபோல் அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் செய்யும் பணியில் ஒருவா் மட்டுமே உள்ளாா். அவா் விடுப்பு எடுத்தால் அந்த அறை பூட்டப்படுகிறது. இதனால் பல கிமீ தொலைவில் இருந்து வரும் பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். கூடுதலாக மற்றொருவரை பணியில் அமா்த்த வேண்டும்.
அதேபோல் மின் அளவீடு செய்யும் பணியில் ஒப்பந்த ஊழியா்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் சில பகுதிகளுக்கு மின் அளவீட்டு பணிக்கு செல்வதில்லை என புகாா்கள் தொடா்ந்து வந்து கொண்டே உள்ளது. இதனால் நிரந்த பணியாளா்களை நியமிக்க வேண்டும்
எனவே கொரட்டி துணை மின் நிலையத்தை திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் உள்ளது போல நவீனப்படுத்த வேண்டும் எனவும், மின் கட்டணத்தை வசூல் செய்யும் பணியில் கூடுதலாக ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும், மின் அளவீடு செய்யும் பணிகளுக்கு நிரந்தர பணியாளா்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்









