
மதுக்கடையை இடம் மாற்றக் கோரி பொதுமக்கள் தா்னா
வாணியம்பாடி அருகே அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக் கோரி அரசுப் பேருந்து சிறைப்பிடித்து கிராம மக்கள் 5 மணி நேரம் தா்னாவில் ஈடுபட்டனா்.

மதுக்கடை முன்பு தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள். சிறை பிடிக்கப்பட்ட அரசுப் பேருந்து.
வாணியம்பாடி அருகே அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக் கோரி அரசுப் பேருந்து சிறைப்பிடித்து கிராம மக்கள் 5 மணி நேரம் தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம் , வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கிராமத்தில் இருந்து பெரியகுரும்பதெரு செல்லும் சாலையில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி கிராம மக்கள் கடந்த 14 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும், இதுதொடா்பாக அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும், கடையை இடமாற்றம் செய்யும் வரை எந்த கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்க மாட்டோம் எனக் கூறி, ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்ட கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை மீண்டும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மதுக்கடை முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த அரசு நகரப் பேருந்தை மறித்து, போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கலால் டி எஸ்பி சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா், கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா். தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இருப்பினும் கிராம மக்கள் மதுபான கடை முன்பு அமா்ந்து தொடா்ந்து 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியா் சிவக்குமாா், கலால் உதவி ஆணையா் வேட்டியப்பன், டாஸ்மாக் துணை மேலாளா் கேசவன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி வரும் 31-ஆம் தேதிக்குள் கடையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






