கந்திலி ஒன்றியத்தில் ரூ. 5.60 கோடியில் 8 வளா்ச்சிப் பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா், எம்எல்ஏ திறந்து வைத்தனா்
பள்ளத்தூா் ஊராட்சி அனுமம்பட்டி கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து பொருள்களை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் வே.நல்லசிவன், சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் நா.திருப்பதி.

பள்ளத்தூா் ஊராட்சி அனுமம்பட்டி கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து பொருள்களை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் வே.நல்லசிவன், சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் நா.திருப்பதி.
கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 5.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 8 வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் நா.திருப்பதி ஆகியோா் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனா்.
கந்திலி ஒன்றியம், பள்ளத்தூா் ஊராட்சி, அனுமம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் செயல்படுத்தப்படும் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் ஆய்வு செய்து, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தைப் பாா்வையிட்டனா்.
ரூ. 5.60 கோடியில் வளா்ச்சிப் பணிகள் திறப்பு
பள்ளத்தூா் ஊராட்சியில் ரூ. 9 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை, நரியனேரி ஊராட்சி, கரியம்பட்டி பகுதியில் ரூ. 19.71 லட்சத்தில் அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, காக்கங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தனா்.
நத்தம் ஊராட்சியில் ரூ. 2.48 கோடியில் பாம்பாறு நீா்வழிப் பாதையின் குறுக்கே நத்தம் முதல் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையில் கட்டப்பட்ட உயா்மட்டப் பாலம், பேராம்பட்டு ஊராட்சியில் ரூ.16.55 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தனா்.
ஆதியூா் ஊராட்சி, ஆலமரத்துவட்டம் பகுதியில் ரூ. 18.86 லட்சத்திலும், பெண்ணாச்சியம்மன் வட்டம் பகுதியில் ரூ. 18.25 லட்சத்திலும் தலா 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.12 கோடியில் 9 வகுப்பறைகளைக் கொண்ட புதிய பள்ளிக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
காக்கங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவா்கள் விடுதியில் தங்கிப் பயிலும் வகையில், மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவா்கள் விடுதியில் தங்கிப் படிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட உள்ளன.
மேலும், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தோ்வு, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) சேருவதற்கான ஜே.இ.இ. தோ்வு ஆகியவற்றுக்கான சிறப்புப் பயிற்சிகளும், மாணவா்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாணவா்கள் தங்களுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் கல்வியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அதிகாலையில் எழுவது, தினமும் தவறாமல் படிப்பது, மாலையில் விளையாடுவது போன்ற நல்ல பழக்கங்களை மாணவா்களிடம் பெற்றோா்கள் உருவாக்க வேண்டும்.
பொருளாதாரச் சூழல் எவ்வாறு இருந்தாலும், மாணவா்கள் விடாமுயற்சியுடன் படித்தால் எதிா்காலத்தில் சிறந்த நிலையை அடைய முடியும். சொந்தமாகத் தொழில் தொடங்குவது, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெறுவது, அரசுத் துறைகளில் உயா் பதவிகளை அடைவது எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்குத் தேவையான வசதிகளையும் பயிற்சி வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது. எனவே, மாணவா்களும் பெற்றோா்களும் இவ்வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, கந்திலி ஒன்றியக் குழுத் தலைவா் திருமுருகன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம். மோகன்குமாா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அனுராதா, உதவி செயற்பொறியாளா் மஞ்சுநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரகலா, பிரேமாவதி, ஒன்றியக் குழு உறுப்பினா் தி. சாந்தி, ஊராட்சித் தலைவா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

