

திருவள்ளூர் பகுதியில் தொடர் மழையால் இதுவரை 37 ஏரிகள், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் 787 ஏரிகளும் , 14 ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 649 ஏரிகளும் உள்ளன. இதுதவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குளங்கள், குட்டைகள் உள்ளன.
இப்பகுதிகளில் கடந்த சில நாள்களா தொடர் மழை பெய்து வருகிறது. இதுவரையில் 37 ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. 40-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளில் பாதி அளவு நிரம்பியுள்ளன.
மாவட்டத்தில் திருத்தணி பகுதியில் கரும்பு, மலர் சாகுபடியும், பொன்னேரி , ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் நெல் , வாழை, நிலக்கடலை, காய்கறிகள் மற்றும் மக்காச்சோளமும், திருவள்ளூர் பகுதிகளில் வாழை , மரவள்ளிக் கிழங்கு, நெல் ஆகியனவும் பயிரிட்டுள்ளன.
தற்போது, பெய்து வரும் மழையால் பயிர்கள் அனைத்தும் செழிப்பாக வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): பூந்தமல்லி-42, அம்பத்தூர்-29, சோழவரம்-25, தாமரைப்பாக்கம்-19, செங்குன்றம்-15, திருவேலங்காடு-13, ஊத்துக்கோட்டை-12, திருவள்ளூர்-11, பூண்டி-5.80, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி-5 , திருத்தணி-3, ஆர்.கே.பேட்டை-2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.