கும்மிடிப்பூண்டி அருகே, செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பெரியார் நகரில் அருள்மிகு செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில், ரூ. 20 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவை ஒட்டி ஆகஸ்ட் 8-ஆம் தேதி பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, கிராம தேவதை பிரார்த்தனை, கணபதி பிரார்த்தனை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, தனபூஜை, நூதன பிம்பங்கள் கரிக்கோலம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, அஷ்டபலி மிருத்சங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷôபந்தனம், கும்பலங்காரம், திரவிய சுத்தி, சிவாச்சாரியார் அநுக்ஞை, தேவ அநுக்ஞை, முதல் கால யாக பூஜை, விசேஷ ஹோமம், தீபாரதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை (ஆகஸ்ட் 15) விசேஷ சாந்தி, அஷ்டா தசக்கிரியை, தச தரிசனங்கள், பிம்ப பிரதிஷ்டை, இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், தீபாராதனை, மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடி சந்தனம், தத்வார்ச்சனை, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் விசேஷ ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
இதையடுத்து, கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை நான்காம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காமாட்சி அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், தீர்த்த பிரசாதம் வழங்குதல், காமாட்சி அம்மனுக்கு மகா அபிஷேகம், மாங்கல்யதாரணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் செல்வவிநாயகர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிகழ்வில் பெத்திக்குப்பம், தேர்வழி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளைத் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் எஸ்.முருகன், பொருளாளர் வி.நாராயணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.