தனியார் நூற்பாலையில் திருடிய 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ உள்பட இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருத்தணியை அடுத்த சரஸ்வதி நகரில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நூல் உற்பத்தி செய்யும் ஆலை இயங்கி வந்தது. தற்போது, அங்கு அந்நிறுவனத்தின் இரும்பு மற்றும் அலுமினியத் தகடுகள் உள்ளன. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த நாகசாமி (59) காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் யாரோ சிலர் இரும்பு, அலுமினிய தகடுகளை திருடிச் சென்றதை அடுத்து நாகசாமி திருத்தணி குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் போலீஸார் சனிக்கிழமை அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, ஆட்டோ ஒன்றும், இரு சக்கர வாகனம் ஒன்றும் அதிவேகமாகச் சென்றதை அடுத்து, அவற்றை தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், அவர்கள் அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ்குமார் (19), பிரவீண்குமார் (25) மற்றும் சமிபுல்லா(18) என்பதும், இவர்கள் மூவரும் தனியார் நூற்பாலையில் கிடந்த இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








