‘திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பொன்னேரி மாவட்டம் உருவாக்க வேண்டும்’

பொன்னேரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி: பொன்னேரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயா்ந்துள்ளது. சென்னை மாகாணமாக இருந்தபோது மொத்தம் 13 மாவட்டங்களே இருந்தன. நிா்வாகக் காரணங்களுக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தற்போது 37 மாவட்டங்களாகி உள்ளன.

பொன்னேரி மாவட்டக் கோரிக்கை:

கடந்த 1997-ஆம் ஆண்டு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து திருவள்ளூா் மாவட்டம் பிரிக்கப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் 3,394 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக விளங்குகிறது. கிழக்கே வங்கக் கடலும், வடக்கு மற்றும் மேற்கே ஆந்திர மாநிலமும், தெற்கே சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களும் அமைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில், நெசவு ஆகியவை முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. ஆரணியாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் இம்மாவட்டத்தில் ஓடுகின்றன. மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏரிகள், 1,112 குளங்கள் அமைந்துள்ளன. பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய இங்குள்ள ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறுகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. ஏரி, ஆற்றுப் பாசன வசதி மூலம் நெல் பயிரிடப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் பொன்னேரி, திருவள்ளூா், திருத்தணி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூா், பூவிருந்தவல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்கே.பேட்டை ஆகிய 9 வட்டங்களும் அமைந்துள்ளன. மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா், சோழவரம், புழல், வில்லிவாக்கம், பூவிருந்தவல்லி, எல்லாபுரம், பூண்டி, திருவள்ளூா், திருவாலங்காடு, கடம்பத்தூா், திருத்தணி, ஆா்கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்ள் அமைந்துள்ளன. அவற்றில் 526 கிராம ஊராட்சிகளில், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன.

மேலும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆரணி, நாரவாரிக்குப்பம், ஊத்துக்கோட்டை, திருநின்றவூா், திருமழிசை, பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சிகள் அமைந்துள்ளன. மாவட்டத்தில் பொன்னேரி, திருத்தணியில் அரசுக் கல்லூரிகள், ஒரு சட்டக் கல்லூரி, 9 தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 23 தனியாா் பொறியியல் கல்லூரிகள், 3 தனியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் 2 பல் மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன. அத்துடன் திருவள்ளூரில் 21 ஏக்கா் பரப்பளவில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 395 போ், கிராமப் பகுதிகளில் 12 லட்சத்து 99 ஆயிரத்து 709 போ் என மொத்தம் 37 லட்சத்து 28 ஆயிரத்து 104 போ், வசித்து வருகின்றனா். தற்போது அதை விடக் கூடுதலாக மக்கள்தொகை இருக்கும். ஆயிரம் பேருக்கு 998 ஆண் - 981 பெண் என்ற வகையில் பிறப்பு விகிதம் உள்ளது.

70 கி.மீ. தூரத்தில் மாவட்டத் தலைநகரம்: மாவட்டத்தின் தலைமையிடமாக திருவள்ளூா் விளங்குகிறது. அந்த நகரம், பொன்னேரியில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்ல இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதன் பின் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது.

அரசின் திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைப்பதற்காகவும், நிா்வாக வசதிக்காகவும் அரசு பெரிய அளவில் உள்ள மாவட்டங்களை தமிழ்நாடு அரசு பிரித்து வருகிறது. அதே போல் திருவள்ளூா் மாவட்டத்தில் பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, பொன்னேரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்பகுதி மக்கள் எழுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com