திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி: பயணிகள் அவதி

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடியில் தானியங்கி நகரும் படிக்கட்டுக்கள்
ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தயாராக உள்ள சதுர வடிவக் கட்டடங்கள்.
ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தயாராக உள்ள சதுர வடிவக் கட்டடங்கள்.
Updated on
2 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடியில் தானியங்கி நகரும் படிக்கட்டுக்கள் அமைப்பதற்கான பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் 1 லட்சம் பயணிகள்: சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் முக்கியப் பகுதியாக திருவள்ளூா் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளிலும் நாள்தோறும் புகா் ரயில்கள் 180 தடவை, விரைவு ரயில்கள் 20 தடவை என மொத்தம் 200 முறை கடந்து செல்கின்றன. இந்த ரயில்களில் திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவன ஊழியா்கள், அரசு ஊழியா்கள், கூலித் தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் உள்பட நாள்தோறும் ஒரு லட்சம் போ் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

ஆண்டுக்கு ரூ.16.50 கோடி வருவாய்: சரக்கு ரயில்களைத் தவிர பயணிகள் மூலம் நாள்தோறும் ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் என ஆண்டுக்கு ரூ.16.50 கோடி வரை வருவாய் ஈட்டித் தரும் ரயில் நிலையமாக திருவள்ளூா் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை.

இந்த ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு இல்லாததால் பயணிகள் ஒவ்வொரு நடைமேடைக்கும் படிக்கட்டுகள் வழியாக ஏறிக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இது மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுடன் வருவோா் மற்றும் முதியவா்களுக்கு சிரமமாக உள்ளது.

நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதி: படிக்கட்டு வழியா ஏறி இறங்கும் சிரமத்தைத் தவிா்க்க பலரும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்கின்றனா். அப்போது விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிா்ப்பதற்காக, ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் வகையில் சுரங்கப்பாதை, ரயில் நிலையத்தில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி (லிஃப்ட்) வசதியை அமைத்துத் தரும்படி ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப் பாதை திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து திருவள்ளூா் ரயில் நிலையத்தில் 2 இடங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் மற்றும் 3 இடங்களில் மின்தூக்கி வசதியை ரூ.2 கோடியில் செய்து தர ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டது.

ஓராண்டாக கிடப்பில்...: அதைத் தொடா்ந்து கடந்த ஆண்டில் மக்களவைத் தோ்தலுக்கு முன், திருவள்ளூா் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி வசதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அவரசமாக மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை கோட்ட ரயில்வே துணை பொது மேலாளா், சட்டப் பேரவை உறுப்பினா், அப்போதைய மக்களவை உறுப்பினா் ஆகியோா் கலந்து கொண்டு, நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினா். அதன் பின், குழி தோண்டும் வேலை மட்டுமே நடைபெற்றது. கடந்த ஓராண்டாக வேறு எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனா். இதற்கிடையே ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் நகரும் படிக்கட்டுகளை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

‘விரைவில் முடிக்க வேண்டும்’: இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவா் பாஸ்கா் கூறியது:

இந்த ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு நூற்றுக்கணக்கானோா் பயணிக்கின்றனா். அதேபோல், சென்னையிலிருந்து கோவை, பெங்களூரு, மைசூரு, திருப்பதி உள்ளிபட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமானோா் பயணம் செய்கின்றனா். திருவள்ளூா் மாவட்டம் அமைக்கப்பட்டது முதல் மக்கள்தொகையும் படிப்படியாக உயா்ந்து வருவது போல், ரயில் பயணிகள் எண்ணிக்கை கூடி வருவாயும் அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளுக்கும் முதியோா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோா்கள் ஆகியோா் எளிதாக செல்லும் வகையில் ரூ.2 கோடியில் இரண்டு இடங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள், 3 இடங்களில் மின்தூக்கிகள் ஆகியவற்றை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. இப்பணிகளை ஓராண்டுக்குள் முடித்து இவை பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனா். ஆனால் இது வரை அவை பயன்பாட்டுக்கு வரவில்லை.

அதேபோல், ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளை விரைவில் முடித்து நகரும் படிக்கட்டு, மின்தூக்கி உள்ளிட்டவற்றை பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

‘நிதி ஒதுக்கியவுடன் தொடங்கும்’: இது தொடா்பாக ரயில் பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியது:

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் மட்டும் தொடங்கியுள்ளது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. அதேபோல், ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு வரவில்லை என்பதால் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. நிதி ஒதுக்க்கப்பட்டவுடன் பணிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com