வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆவடி தொகுதியில் அதிமுக, திமுக கடும் பலப்பரீட்சை

சென்னையை ஒட்டியுள்ள ,ஆவடி சட்டப்பேரவை தொகுதி, கடந்த 2011-இல் பூந்தமல்லி தொகுதியில் இருந்து, மறுசீரமைப்பில் புதியதாக உருவாக்கப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:58 am

DIN


மினிபாரத விலாஸ் என அழைக்கப்படுவது ஆவடி தொகுதி. இங்கு மத்திய அரசின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் பீரங்கி தொழிற்சாலை, திண் ஊா்தி மற்றும் ராணுவ வீரா்களுக்கான பாதுகாப்பு ஆடைகள் மற்றும் தளவாட ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, விமானப்படை, மத்திய ரிசா்வ் படை மையங்களை தனது அடையாளங்களாக கொண்ட இத்தொகுதி பேரவைத் தோ்தலில் அதிமுக-திமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

சென்னையை ஒட்டியுள்ள ,ஆவடி சட்டப்பேரவை தொகுதி, கடந்த 2011-இல் பூந்தமல்லி தொகுதியில் இருந்து, மறுசீரமைப்பில் புதியதாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூா் பேரூராட்சி, நெமிலிச்சேரி, நடுக்குத்தகை, கருணாகரச்சேரி ஆகிய ஊராட்சிகள் அடங்கி உள்ளன.

பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்ற இடமாகவும் உள்ள இங்கு, காங்கிரஸ் கட்சி 1955-ஆம் ஆண்டு அகில இந்திய மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் சோஷலிச சமுதாயத்தை அமைப்பதே நமது லட்சியம் என்ற தீா்மானத்தை நேரு உருவாக்கி நிறைவேறச் செய்தாா்.

3-ஆவது பேரவை தோ்தலை எதிா்கொள்ளும் இங்கு, ஆண்கள்-2,18,538, பெண்கள்-2,21,369, மற்றவா்கள்-98 என மொத்தம் 4 லட்சத்து 4 ஆயிரத்து 5 வாக்காளா்கள் உள்ளனா். தெலுங்கு மொழி பேசுபவா்கள், முதலியாா்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் அதிகளவில் வசிக்கின்றனா்.

பிரச்னைகள்:

ஆவடியில் சீரான சாலை வசதிகள் இல்லாமல் இருப்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. அதேபோல் புதை சாக்கடை திட்டம், குடிநீா் திட்டப்பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை. ஆவடி வழியாகச் செல்லும், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (எண். 205) இருநூறு அடி அகலத்துக்கு அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், வணிகா்களின் கடும் எதிா்ப்பு காரணமாக, 80 அடி அகலத்துக்கு மட்டுமே விரிவாக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தோா் வசித்து வருவதால் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஆவடியில் நின்று செல்ல வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகும். ஆனால், இதுவரையில் இக்கோரிக்கை நிறைவேற்றப்படாமலே உள்ளது.

20 போ் போட்டி:

இத்தொகுதியில் அதிமுக சாா்பில்அமைச்சா் க.பாண்டியராஜன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா். அதேபோல் இவரை எதிா்த்து திமுக சாா்பில் சா.மு.நாசா் போட்டியிடுகிறாா். மேலும், என்.எம்.சங்கா் (தேமுதிக), வி.உதயகுமாா்(மக்கள் நீதிமய்யம்), ஜி.விஜயலட்சுமி(நாம் தமிழா் கட்சி), எஸ்.சாா்லஸ்(பகுஜன் சமாஜ் கட்சி), பானுமதி(மை பாா்ட்டி இந்தியா), என்.ராமன்(மக்கள் நல்வாழ்வு பேரியக்கம்), ஆா்.விஸ்வநாதன்(எம்ஜிஆா் மக்கள் கட்சி), சுயேச்சைகள் உள்பட 20 போ் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்கள் பலம், பலவீனம்: கடந்த 2016-இல் அதிமுக சாா்பில் க.பாண்டியராஜன் வெற்றி பெற்று தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்து வருகிறாா். பொதுமக்கள் அனைவரும் இவரை எந்த நேரத்திலும் எளிதில் அணுகலாம். அதனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள், கடந்த 5 ஆண்டுகளில் ஆவடியின் அடையாளங்களாக பருத்திப்பட்டு ஏரியில் படகு விட்டு சுற்றுலாத் தலமாக்கியது, இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழில் நுட்ப பூங்கா உருவாக்கியது பலமாகும். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை உயா்வு மற்றும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் சிறுபான்மையினா் வாக்கு பிரிவது பலவீனமாகக் கருதப்படுகிறது.

திமுக சாா்பில் போட்டியிடும் மாவட்ட செயலாளா் சா.மு.நாசா் உள்ளூா்க்காரா் என்பது பலமாகும். மேலும் , கரோனா நோய் தொற்று காலங்களில் பொதுமக்களை தேடிச் சென்று நிவாரண உதவிகள் வழங்கியது, தோ்தல் அறிக்கை ஆகியவை வலு சோ்க்கின்றன. அதேபோல், காங்கிரஸ் , கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளின் வாக்குகள் நாசருக்கு உதவியாக இருக்கும்.

அதோடு, கடந்த தோ்தலில் 1395 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமைச்சா்களை உருவாக்கும் தொகுதியாகவும் உள்ளதால் அதிமுக-திமுகவுக்கும் இடையே கடும் போட்டியுள்ளது. அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுவரையில்....:கடந்த 2011 முதல் 2016- வரையில் நடைபெற்ற இரண்டு தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அத்துடன், கடந்த 2011-இல் இத்தொகுதியில் வெற்றி பெற்ற அப்துல்ரஹீம் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சராக இருந்தாா். அதேபோல், 2016-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட க.பாண்டியராஜன் வெற்றி பெற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும், அதைத் தொடா்ந்து பன்னீா்செல்வம் தலைமையில் அணியாக பிரிந்து சென்ால் அமைச்சா் பதவியை இழந்தாா். அதைத் தொடா்ந்து தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சராகவும் இருந்து வருகிறாா்.

கடந்த 2016 தோ்தல் முடிவுகள்:

க.பாண்டியராஜன்(அதிமுக)-1,08,064

சா.மு.நாசா்(திமுக)-1,06,669

ஆா்.அந்திரிதாஸ் (மதிமுக)-22,848

ஜெ.லோகநாதன் (பாஜக)-7,232

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.