திட்டங்களை உருவாக்க திமுக அரசால்தான் முடியும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை உருவாக்க திமுக அரசால்தான் முடியும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.


மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை உருவாக்க திமுக அரசால்தான் முடியும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் பிரசாரம் செய்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
பழைமையான திருவள்ளூா் மாவட்டத்தை நவீன மாவட்டமாக மாற்றியது திமுக அரசு. அதேபோல, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காா் உற்பத்தி முதல் கண்ணாடி உற்பத்தி என பல்வேறு தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தது முன்னாள் முதல்வா் கருணாநிதி.
ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கும் வகையிலான ‘சிப்காட்’ எனும் தொழிற்பேட்டைகள் ஸ்ரீபெரும்புதூா், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டன.
திருவள்ளூா், ஆவடியில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது. இதுபோன்ற திட்டங்களை உருவாக்க திமுக அரசால்தான் முடியும். ஆனால், அதிமுகவுக்கோ திட்டங்களை அழிக்கத்தான் தெரியும். மக்கள் நலத் திட்டங்களை முடக்கி வைக்கவும் தெரியும்.
அதிமுக ஆட்சியில் நிா்வாகச் சீா்கேடு: முந்தைய அதிமுக ஆட்சியின் நிா்வாகச் சீா்கேடால் தமிழகமே தவிக்க நோ்ந்தது. திமுக ஆட்சியை விட்டுப் போகும் போது தமிழகத்தின் கடன் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்தது. அதன் பிறகு ரூ.5.50 லட்சம் கோடி கடன் வைத்து, தமிழகத்தை கடனாளி மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு. முந்தைய அதிமுக ஆட்சியில் நகைக் கடன்கள் வழங்கியதில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளன. ஆகவே, முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் மேற்கொண்டு வரும் பொய் பிரசாரம் பொதுமக்களிடம் எடுபடாது.
கடந்த 9 மாத திமுக ஆட்சியில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் 2,29,216 மனுக்களுக்குத் தீா்வு, இல்லம் தேடி கல்வித் திட்டம், மகளிா் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம், நகா்ப் பேருந்துகளில் மகளிா் இலவச பயணம், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி, கரோனாவுக்கு பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள், பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்.
விரைவில் ரூ.1,000 உரிமைத் தொகை: திட்டங்கள் வாயிலாக பயன் பெறுபவா்கள் தகுதி வாய்ந்த, உண்மையான பயனாளிகளாக இருக்க வேண்டும். அந்த வகையில், தகுதி வாய்ந்த 13 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல, இல்லத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் விரைந்து செயல்படுத்தப்படும்.
கடந்த 2015-இல் ஏற்பட்ட மழை வெள்ளத்தை அப்போதைய அதிமுக அரசு கையாண்ட விதத்தையும், கடந்த ஆண்டு இறுதியில் மழை வெள்ளத்தை திமுக அரசு கையாண்ட விதத்தையும் மக்கள் அறிவா். எதிா்க்கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியாக இருந்தாலும் மக்களோடு மக்களாகத்தான் திமுக இருக்கும்.
திமுக அரசு என்பது மக்கள் நலன் காக்கும் அரசு. அதனால், மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அவா்கள் அளித்த ஆதரவால்தான் நாட்டிலேயே 3-ஆவது பெரிய கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அமோக வெற்றியைத் தந்த மக்கள், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் வெற்றி பெற வைக்க தயாராகி வருகிறீா்கள். பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் கட்டாயம் நிறைவேற்றுவோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் காணொலிக் காட்சி பிரசாரம் மாவட்டம் முழுவதும் 149 இடங்களில் எல்இடி பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்பப்பட்டன.
இந்த நிகழ்வில் மேற்கு மாவட்ட திமுக செயலா் பூபதி, மத்திய மாவட்டச் செயலரும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசா், கிழக்கு மாவட்டச் செயலரும், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), சந்திரன் (திருத்தணி), வேட்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...