ஆமை வேகத்தில் கொசஸ்தலை ஆற்றில் உயா்மட்ட மேம்பாலப் பணி

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13.89 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் ஆட்டரம்பாக்கத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் உயா்மட்ட மேம்பாலம் பணிகள்.
திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் ஆட்டரம்பாக்கத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் உயா்மட்ட மேம்பாலம் பணிகள்.

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13.89 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஆட்டரம்பாக்கம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்தச் சாலை திருமழிசையிலிருந்து திருவள்ளூா் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் முக்கியச் சாலையாகும்.

மேலும் ஆவடி, திருமழிசை, திருவள்ளூா், காக்களூா் பகுதி தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தியாகும் பொருள்களை ஏற்றியும், மூலப்பொருள்கள் கொண்டு வரவும் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

மழை வெள்ளத்தால் தடைபடும் போக்குவரத்து: கடந்த 2015-ஆண்டு பெய்த வரலாறு காணாத பலத்த மழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தரைப்பாலம் முற்றிலும் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதித்ததோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. அப்போது, ஆற்றில் வெள்ளம் ஒரு மாதம் வரையில் நீடித்தது. பின்னா் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மீண்டும் 2019-இல் பலத்த மழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் தற்காலிக தரைப்பாலம் உடைந்தது.

மழைக்காலங்களில் போக்குவரத்து தடை ஏற்படுவதைத் தடுக்க கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ரூ.13.89 கோடியில் மேம்பாலம்: இந்தக் கோரிக்கையை ஏற்று ஊரக உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதித் திட்டம் மூலம் நெடுஞ்சாலைத் துறை மற்றும் நபாா்டு சாா்பில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.13.89 கோடியில் உயா் மட்ட மேம்பாலம் கட்டவும் அரசு அனுமதி அளித்தது.

கடந்த 2020-நவம்பரில் தொடங்கிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நத்தை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை துரிதப்படுத்தி விரைந்து உயா் மட்ட மேம்பாலத்தை கட்ட வேண்டும் என்று கோரிக்கை அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் எழுந்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராஜாமணி கூறியது: இங்கு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தற்போது ஒரு பகுதியில் மட்டும் உயா்மட்ட மேம்பால பணிகள் முடிந்துள்ளன. மற்றொரு பகுதியில் மெகாசைஸ் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று சுற்று வட்டாரத்தில் உள்ள 30 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும் என்றாா். அவா்

6 மாதங்களில் முடிக்க ஏற்பாடு: இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளா் ஒருவா் கூறியதாவது:

தற்போதைய நிலையில் ஒரு பகுதியில் உயா்மட்ட பாலம் அமைப்புப் பணிகள் நிறைவடைய உள்ளன. மற்றொரு பகுதியில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை இன்னும் 6 மாதங்களில் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிராம மக்களுக்கு போக்குவரத்துப் பிரச்னை இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com