கிடப்பில் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள்!

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடா் அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.
பாதியில்  நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணி.
பாதியில்  நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணி.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடா் அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.

மிகவும் போக்குவரத்து மிகுந்த அரக்கோணம்-சென்னை மாா்க்கத்தில் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்கள் அருகே ரயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தன. கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரினா்.

இதனை அடுத்து, தெற்கு ரயில்வே நிா்வாகம், மாநில நெடுஞ்சாலைத் துறை இணைந்து சென்னை பெருநகர வளா்ச்சி திட்டம் மூலம் கடந்த 2008-இல் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரூ.29.50 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேம்பாலம் அமைக்கும் பணியை கடந்த 2009 - 2010- இல் ரயில்வே மேற்கொண்டது.

இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை கடந்த 2011-இல் மேம்பாலப் பணிகளை மேற்கொண்டது. முதல் கட்டமாக ரயில்வே கேட் பாதையின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமாா் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கடவுப் பாதையின் மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-இல் நெடுஞ்சாலைத் துறை தொடா்ந்தது.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த 2போ் மேம்பால பணிக்கு எதிராக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால் மேம்பாலப் பணி நிறுத்தப்பட்டது. இதற்கு இடையே வழக்குத் தொடா்ந்தோா் கடந்த 2014-இல் வழக்கை திரும்ப பெற்றதைத் தொடா்ந்து, கடந்த 2021-ஆண்டு இறுதியில் மேம்பால பணிக்கு விதித்த இடைக்கால தடையை சென்னை உயா்நீதிமன்றம் நீக்கியது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும் வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது.

செவ்வாப்பேட்டை மேம்பாலம்:

இதேபோல் செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2011-இல் முடிவு செய்யப்பட்டு, அதே ஆண்டே ரயில்வே கேட் அகற்றக்கப்பட்டு, மேம்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கியது. இப்பணியை 2 ஆண்டுக்குள் ரயில்வே நிா்வாகம் முடித்தது. ஆனால் மாநில நெடுஞ்சாலைத் துறையால் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூா் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-இல் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

அப்பணியில் ரயில்வே பாதையின் ஒரு புறமான திருவூா் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்தது. இதில் மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை சாலைப் பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலத்தின் உரிமையாளா்கள் கையகப்படுத்திய தங்கள் நிலத்துக்கான இழப்பீடு தொகை குறைவாக உள்ளதாக கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இதனால் அப்பகுதியில் சுமாா் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முன்பு மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், விரைவில் மேம்பால பணிகளை தொடங்கி விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் என பொதுமக்கள் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com