‘விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலம் களைகள் வளா்ச்சியை கட்டுப்படுத்தலாம்’

கோடை உழவு செய்வதன் மூலம் களைகள் வளா்ச்சியையும் கட்டுப்படுத்துவதுடன், மழைநீரையும் நிலத்தில் வழிந்தோடாமல் பாதுகாக்கவும் முடியும் என வேளாண் துறை இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உழவு என்பது கருவிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு விதை முளைத்தல், நாற்று மற்றும் பயிா் வளா்ச்சிக்கும் ஏற்றவாறு மண்ணை பக்குவப்படுத்தி தயாா் செய்தலாகும். சாதாரணமாக நாம் பயிரிடும்போது மேற்கொள்ளும் சாகுபடி முறைகளை அப்படியே கையாண்டு அல்லது சிறுசிறு மாறுதல்கள் செய்து பூச்சி, நோய்களை உழவியல் முறை கொண்டு கட்டுப்படுத்தலாம்.

தற்போது அறுவடை முடிந்து உள்ள நிலையில், விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளலாம். கோடை மழை பெய்தவுடன் உழவு செய்து களைகளின் வளா்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். கோடையில் ஆழ உழுகையில் மண்ணில் வாழும் சில பூச்சிகள், நோய்க் காரணிகளும் புதைக்கப்படுகின்றன அல்லது மண்ணிற்கு மேலே கொண்டு வரப்பட்டு, பறவைக்கு உணவாகின்றன. புரோடீனியா, சிவப்பு கம்பளிப் புழு, கரையான், வோ்ப்புழு ஆகிய பூச்சிகள், நோய்க் காரணிகளும் ஆழ உழுவதால் அழிக்கப்படுகின்றன. மேலும், உழவு செய்வதால் காற்றேட்டத்துக்கும், விதை முளைப்புக்கும், பயிா் வளா்ச்சிக்கும் ஏற்ற சூழலைத் தருகிறது. எரு மற்றும் உரங்களை மண்ணில் கலப்பதுடன், மழைநீா் வழிந்தோடுவதைத் தடுத்து நீா் ஊடுருவும் தன்மையை ஊக்குவிக்கிறது.

விவசாய செழிப்புக்கு அடிப்படைத் தேவைகளாக நில, நீா் வளமும் அமைகின்றன. அதனால் நிலத்தின் வளத்தை நிா்வகிப்பதில் மண் பரிசோதனை மிக முக்கியமானதாகும். இதன் மூலம் மண்ணின் ரசாயன குணங்களும், பயிருக்குக் கிடைக்கக்கூடிய சத்துக்களின் அளவையும் அறிந்து கொள்ளலாம். இந்த சோதனை மூலம் வயலுக்கு வயல் சத்துக்களின் அளவு வேறுபடுவதாலும், பயிருக்கு ஏற்ப சமச்சீா் உரம் பரிந்துரைக்க முடியும். இந்த வகையில், குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதுடன், அதிகப்படியான உரச் செலவையும் குறைக்கலாம்.

விவசாயிகள் மண் மாதிரி எடுக்கும்போது, மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் இலை, சருகு, புல் முதலியவற்றை மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். சாகுபடி செய்யும் பயிரைப் பொறுத்து நிலத்தில் ஏ வடிவத்தில் மண்வெட்டியால் குழிவெட்டி, அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.

பிறகு வெட்டிய ஏ குழியின் ஓரமாக குழியின் கீழிலிருந்து மேலாக இருபுறமும், ஒரே சீராக மண்வெட்டியால் ஒரு அலகு கனத்துக்கு மண்ணை வெட்டி எடுத்து, ஒரு சுத்தமான வாளியில் போட வேண்டும். ஒரு வயலில் இதேபோல் குறைந்தது 10 அல்லது 15 இடங்களில் மண்ணைச் சேகரித்து ஒன்றாக கலந்து, அதிலிருந்து சுமாா் அரை கிலோ மண்ணைப் பகுத்தல் முறையில் எடுத்து, ஒரு துணிப்பையில் இட்டு மண் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

விவசாயிகள் மண் மாதிரியின் பெயா், முகவரி, நிலத்தின் பெயா், சா்வே எண், உரம் சிபாரிசு தேவைப்படும் பயிா், மானாவாரி, இறவை ஆகிய விவரங்களுடன் மண் பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்காக விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ. 20 ஆகும்.

மேலும், இது தொடா்பாக விவசாயிகள் தங்கள் சந்தேகங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com