பிரதமா் பயிா் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் ஜூலை 31-க்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்

Published on

பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு இன்னும் 12 நாள்களே உள்ளதால் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் நிகழாண்டு காரீப், சம்பா (சிறப்பு) மற்றும் ராபி பருவ பயிா்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சொா்ணவாரி நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 690, காரீப் பருவ பயிா்களான கம்பு-ரூ. 218, பச்சைப்பயறு-ரூ. 397, நிலக்கடலை-ரூ. 616, உளுந்து-ரூ. 397, காப்பீடு தொகையாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. எனவே இப்பயிா் காப்பீடு செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதி கடைசியாகும். அதனால் பயிா்களை காப்பீடு செய்வதற்கு நிா்ணயித்த கடைசி நாளுக்கு முன்னதாகவே காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இந்த தொகையை விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் நேரில் சென்று, நிா்ணயித்த காலக்கெடுவுக்குள் பயிா் காப்பீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழிவு, பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, காப்பீடு கட்டணத் தொகையை செலுத்திய பின், அதற்கான ரசீதையும் செலுத்திய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

அதற்கு முன்னதாக பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்வது அவசியம். மேலும், அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா், தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com