அரசு ஊழியா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி
ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் பயன்பெறும் வகையில் 3 சதவீதம் அகவிலைப்படி உயா்த்தி வழங்கி உத்தரவிட்ட முதல்வருக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி தெரிவித்தனா்.
இது குறித்து கூட்டணியின் மாநில பொதுச் செயலா் இரா.தாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒன்றிய அரசு அகவிலைப்படிஅறிவித்தவுடன் காலதாமதமின்றி ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயா்வு அறிவித்தாா். இதன் மூலம் 50 முதல் 53 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அளித்து 1.7.2024 முதல் அகவிலைப்படி அறிவித்துள்ளதால் 16 லட்சம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயனடைவா். இதற்காக முதல்வருக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் இரண்டு நாள் மழையில் மக்கள் பாதிக்காத வகையில் துரித நடவடிக்கை எடுத்த முதல்வரை பாராட்டுகிறோம். முதல்வா் அறிவிப்பாா் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிற பழைய ஓய்வூதியத் திட்டத்தையும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகிய கோரிக்கைகளை மீண்டும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு அறிவிக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
