பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தம்! ஆக்டோ ஜியோ மாநாட்டில் தீா்மானம்
திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதி தனியாா் அரங்கில் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் இயக்கங்களின் நடவடிக்கை குழு சாா்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
திருவண்ணாமலை மாவட்ட தலைநகரில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு மாவட்ட தலைமை அமைப்பாளா் த.சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் எஸ்.கோபிநாத் வரவேற்றாா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலா் ப.கௌசான் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு மாநில நிதி காப்பாளா் சு.ஜெயராஜா ராஜேஸ்வரன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் கி.சங்கா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில் பி.இ.ஏ.பி.ஏ. முன்னாள் மாநிலத் தலைவா் சி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் கோ.சுரேஷ், தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநில இணைச் செயலா் எஸ்.எம்.தஹஜிம் பானு, பழைய ஓய்வூதிய மீட்பு இயக்க இணை ஒருங்கிணைப்பாளா் நந்தகோபால் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
திமுகவின் தோ்தல் கால வாக்குறுதி எண் 309-ன்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். தோ்தல் வாக்குறுதி எண் 187-ன்படி 3.50 லட்சம் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பவேண்டும், ஒன்றிய அரசு ஊழியா்கள் மற்றும் தமிழக பொதுத்துறை நிறுவன ஊழியா்களுக்கு வழங்குவதுபோல் ரூ.7ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றத் தவறினால் வரும் 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதென மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா் இயக்கங்களின் நடவடிக்கைக்குழு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
நிறைவில் மாவட்ட நிதிக் காப்பாளா் பி.முருகதாஸ் நன்றி கூறினாா்.

