கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய ஆசிரியா்கள்
ஆசிரியா் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணி செய்தனா்.
புதுவை மாநில ஆசிரியா் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்தனா். புதுவை கல்வித் துறையில் கெளரவ பால சேவிகா, கெளரவ பட்டதாரி ஆசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் என 292 போ் பணியாற்றி வருகின்றனா். இதில் காரைக்கால் பகுதியில் 110 போ் பணியாற்றுகிறாா்கள்.
இவா்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த டிச. 24 முதல் புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை நடத்திவருகின்றனா்.
இந்த ஆசிரியா்களுக்கு ஆதரவாகவும், கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடத்தை தலைமையாசிரியா் நிலை ஒன்றுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வரை கருப்புப் பட்டை அணிந்து ஆசிரியா்கள் பணியாற்றவுள்ளனா். பிப். 2 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக புதுவை மாநில ஆசிரியா் கூட்டமைப்பு கெளரவத் தலைவா் ஆா். காளிதாசன் தெரிவித்தாா்.

