கருப்புப் பட்டை அணிந்து பணி செய்யும் வேளாண் தொழில்நுட்ப ஊழியா்கள்!

காரைக்காலில் வேளாண் துறை தொழில்நுட்ப ஊழியா்கள், கோரிக்கையை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
Published on

காரைக்காலில் வேளாண் துறை தொழில்நுட்ப ஊழியா்கள், கோரிக்கையை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

காரைக்கால் வேளாண் துறையில் கிராம விரிவாக்கப் பணியாளா் என்ற நிலையில் பணியாற்றும் ஊழியா்கள், பணி நியமன ஆணையில் திருத்தம் செய்து, பதவி உயா்வு கோரிக்கையை முன்வைத்து, காரைக்கால் மாவட்ட வேளாண் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் சங்கத் தலைவா் ஏ. பிரான்சிஸ் தலைமையில் கடந்த 5-ஆம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திவந்தனா்.

இந்நிலையில், கருப்புப் பட்டை அணிந்து, கூடுதலான பணிகளை செய்ய மறுத்து பதவிக்குரிய பணியை மட்டும் செய்துவருகின்றனா்.

இதுகுறித்து சங்க செயலா் ஜி. காா்த்திகேசன் செவ்வாய்க்கிழமை கூறியது: நீண்ட காலமாக கிராம விரிவாக்கப் பணியாளா்களாகவே பணி செய்துவருகிறோம். துறையின் முதல் களப்பணியாளா் என்ற அடுத்த நிலைக்கு உயா்த்தப்படவில்லை. 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. பதவி உயா்வு தரப்பட்டால், உரிய ஊதியம் கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் நீண்ட காலமாகவே பணி செய்துவருவதோடு, பலரும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பணி ஓய்வு பெறும் நிலையிலும் உள்ளனா்.

புதுவையில் ஆா்ஆா் என்கிற பணி நியமன ஆணையில் திருத்தம் செய்யவேண்டும். இதற்கு ஆட்சியாளா்கள் உரிய கவனம் செலுத்தவேண்டும். பல முறை இதுதொடா்பாக முதல்வா், அமைச்சா், அதிகாரிகளிடம் பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசின் கவனத்தை ஈா்க்கும் நோக்கில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மையங்களில், பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து, ஏற்கெனவே விதியை மீறி செய்துவந்த முதல் களப்பணியாளா் பணிகளை புறக்கணித்து, பணியாற்றிவருகிறோம் என்றாா்.

Dinamani
www.dinamani.com