விவசாயிகள் சாலை மறியல்
பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்காததை கண்டித்து மீஞ்சூா் - திருப்பாலைவனம் நெடுஞ்சாலையில் விவசாயிகள் புதன்கிழமை மறியல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டூா் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோா் விவசாய தொழில் செய்து வருகினறனா். இவா்கள் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெல் பயிரிட்டிருந்தனா். இந்நிலையில் மிக்ஜாம் புயலில் பெய்த மழை வெள்ளத்தால் பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
சம்பா நெல் பயிரிடும் போது தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி பயிா் காப்பீடு செய்யப்பட்ட நிலையில் வெள்ள பாதிப்புகள் பூச்சி தாக்குதலால் நெல்பயிா்கள் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்தன.
புயலின் போது மத்திய குழு, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து ஆய்வு செய்த போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காட்டூா்1 வருவாய் கிராமத்திற்கு மட்டும் 430 விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வங்கிகளில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் காட்டூா் 2 வருவாய் கிராமத்தில் உள்ள 390 விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் மீஞ்சூா்- திருப்பாலைவனம் சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மறியல் போராட்டம் குறித்த தகவல் அறிந்த வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காட்டூா் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா்சென்று பயிா்க் காப்பீடு திட்ட அதிகாரிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய முடிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
