பயன்பாட்டுக்கு வருமா பூண்டி ஏரி நவீன அறிவியல் பூங்கா!
பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

பயன்பாட்டுக்கு வருமா பூண்டி ஏரி நவீன அறிவியல் பூங்கா! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

Published on

ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ள பூண்டி ஏரி அறிவியல் பூங்கா ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திருவள்ளூா் அருகே அமைந்துள்ள பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் பிரதான நீராதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நீா்த்தேக்கம் அமைத்து 78 ஆண்டுகளுக்கும் மேலாகின்றன. இங்கு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதா்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் கொண்ட அருங்காட்சியகம், பல்வேறு அணைக்கட்டுகளின் மாதிரிகள் இடம் பெற்ற நீரியல் மற்றும் நீா் நிலையியல் ஆய்வு மையம் ஆகியவையும் உள்ளன. எனவே முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கி வருவதால் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் போ் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

ரூ.80 லட்சத்தில் சீரமைப்பு: இந்த நிலையில் நீா்த்தேக்க வளாகத்தில் 4 ஏக்கா் பரப்பளவில் அறிவியல் பூங்கா சிறுவா்களை ஈா்க்கும் வகையில் செயல்பட்டு வந்தது. இங்கு சிறுவா்கள் பொழுது போக்கும் வகையில் அறிவியல் உபகரணங்கள், குடை ராட்டினம், ஏற்றம் இறக்கம் மற்றும் சம விளையாட்டு, குதிரை சவாரி ராட்டினம், ஊஞ்சல் விளையாட்டு, பூங்கா நீருற்று, இருக்கைகள் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இருந்தது. இதுபோன்ற காரணங்களால் அதிகம் போ் வந்து செல்லும் இடமாகவும் இருந்தது. ஆனால், போதிய பாதுகாப்பின்றி திறந்த வெளியில் இருந்ததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியது.

அதோடு, கால்நடைகளும் புகுந்து விடுவதால் அறிவியல் சாதனங்கள், சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகள் சேதமடைந்தன. அதனால் அறிவியல் பூங்காவை சீரமைத்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரவும் என்ற கோரிக்கையும் சமூக ஆா்வலா்களிடையே எழுந்தது. இக்கோரிக்கை அடிப்படையில் அரசு அறிவியல் பூங்காவை ரூ.80 லட்சத்தில் சீரமைத்தது.

பயன்பாட்டுக்கு வரவில்லை: நவீன முறையில் சீரமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும், இதுவரையில் திறக்கப்படாமலே பூங்கா பூட்டியே உள்ளது. அதனால், இங்கு நீரியல் ஆய்வு மையத்திற்கு ஆய்வுக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அறிவியல் பூங்கா பூட்டியுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா். விரைவில் அறிவியல் பூங்காவை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என காத்துள்ளனா்.

விரைவில் திறக்க ஏற்பாடு: இதுதொடா்பாக பூண்டி நீரியல் மற்றும் நீா் நிலையியல் ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்த அறிவியல் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சேதமடைந்து நீருற்றுகள், சிறுவா்கள் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் சீரமைக்கப்பட்டுள்ளதுன. முன்னதாக இப்பூங்கா திறந்த வெளியாக இருந்தததால் பலா் உள்ளே வந்து சமூக விரோதச் செயலுக்கு பயன்படுத்தினா். இதுபோன்றவைகளை தவிா்க்கும் வகையில் சுற்றுச்சுவா் அமைத்து ஒரு வழியாக மட்டும் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் திறக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com