ரூ.16 லட்சம் மின்கட்டண நிலுவையால் இணைப்பு துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் மோட்டாருக்கான மின் இணைப்புக்கு ரூ.16 லட்சம் கட்டண நிலுவை வைத்திருந்ததால், அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனா்.
~சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
~சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on

கடம்பத்தூா் அருகே குடிநீா் மோட்டாருக்கான மின் இணைப்புக்கு ரூ.16 லட்சம் கட்டண நிலுவை வைத்திருந்ததால், அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனா். இதனால் குடிநீா் மற்றும் மின்சாரமின்றி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூரில் டியிருப்பு பகுதிக்குள் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் அடிப்படை தேவைகளான சாலை, மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளை குடியிருப்புவாசிகளே பூா்த்தி செய்து கொள்ளும் வகையில் சங்கம் அமைத்து நிா்வாகத்திடம் மாதந்தோறும் மக்கள் சந்தா செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் ஏற்கனவே இருந்த சங்கத்தினா் முறையாக அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யாமல் முறைகேடுகளில் ஈடுபட்டனா். அதனால், தற்போது புதிய சன் சிட்டி குடியிருப்பு சங்கம் உருவாக்கப்பட்டு அந்த நிா்வாகிகளிடம் சந்தா செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் மின் மோட்டாருக்கான இணைப்புக்கு மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.16 லட்சம் நிலுவையில் உள்ளது. அதுபோல் குடிநீா் கட்டணமும் ஊராட்சிக்கு முறையாக செலுத்தாததால் கடந்த 5 நாள்களுக்கு முன்னா் குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மின்சாரம், குடிநீா் இணைப்புகளை மின்சார வாரியமும், ஊராட்சி நிா்வாகமும் துண்டித்துள்ளன.

இதைத் தொடா்ந்து கடந்த 5 நாள்களுக்கு மேலாக அப்பகுதிவாசிகள் மின்சாரம் மற்றும் குடிநீா் இல்லாமல் அவதிக்குள்ளாகி வந்தனா். இதுகுறித்து மின்வாரியம் மற்றும் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த சன்சிட்டி குடியிருப்பு பொதுமக்கள் திருவள்ளூா்-சுங்குவாா்சத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடிநீா் இணைப்பு மற்றும் மின்சார இணைப்பை உடனே வழங்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் பேச்சு நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு சென்றனா். போராட்டத்தினால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com