பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்புள்ள நிலங்களை அதிகாரிகள் மீட்டனர். இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பூந்தமல்லியில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடிக்கு மேலான மதிப்புள்ள நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பிலும், சில இடங்கள் மிக சொற்பமான தொகைக்கு வாடகை மற்றும் குத்தகைக்கும் விடப்பட்டுள்ளது.
இந்த கோவிலின் எதிரே சொந்தமான நிலம் சுமார் 1,568 சதுரடி பரப்பளவில் பூந்தமல்லியை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக உணவகம் மற்றும் காய்கறிக் கடையை நடத்தி வந்தனர். அவர்கள் இதற்கான வாடகையையும் கோயில் நிர்வாகத்திற்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி கோயில் நிர்வாகம் சார்பில் அந்த கடைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு அந்த கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கோயில் அதிகாரியுடன் பேச்சு நடத்தினர். அப்போது அவர்கள் கால அவகாசம் கொடுத்தால், தாங்களே கடைகளை காலி செய்து விடுவதாகவும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் கோயில் நிர்வாகத்தினர் அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செயல் அலுவலர்கள் மாதவன், லதா ஆகியோர் தலைமையில் 2 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸôருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடையில் இருந்த பொருள்களை உரிமையாளர்கள், ஊழியர்கள் வெளியே எடுத்து வைத்தனர். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியது, மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.57 கோடியாகும். மேலும் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலங்கள் மீட்கும் பணி தொடரும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.