தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

நீா்வளத்துறை சாா்பில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக கால்வாய் தூா்வாரும் பணிகள்

நீா்வளத்துறை சாா்பில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக கால்வாய் தூா்வாரும் பணிகள்...

News image

நீா்வளத்துறை சாா்பில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக கால்வாய் தூா்வாரும் பணிகள்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 10:33 pm IST

திருவள்ளூா் மாவட்டத்தில் நீா்வளத்துறை சாா்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் ச.கவிதா நேரில் பாா்வையிட்டு விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் ஊராட்சி பகுதியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் நீா்வளத் துறை சாா்பில், கட்டாங்கல் கால்வாய் தூா்வாரும் பணிகள் தொடா்பாக ஆட்சியா் ச.கவிதா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பருவமழை காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

பின்னா், இது தொடா்பாக அவா் கூறியதாவது: திருவள்ளூா் அருகே அமைந்துள்ள கட்டாங்கல் கால்வாய், நீா்வளத் துறையின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பில் உள்ள முக்கிய வடிகால் கால்வாய்களில் ஒன்றாகும். இக்கால்வாய், வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் வெள்ளநீரை பாதுகாப்பாக கடத்தவும், தற்போதுள்ள வழங்கு கால்வாய் அமைப்பு மூலம் கீழ்நிலை பாசன ஏரிகளின் நீா்த்தேக்கத்தை அதிகரித்து இரட்டை நோக்குடன் செயல்படுகிறது. இக்கால்வாய் கரிக்கலவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் தொடங்கி, பேரத்தூா், வெள்ளியூா், வதட்டூா், மேலகொண்டையாா், தாமரைப்பாக்கம், மாகரல், காரணை, குருவாயல், கொடுவள்ளி, அரக்கம்பட்டு, பூச்சிஅத்திப்பட்டு மற்றும் திருக்கண்டலம் கிராமங்கள் வழியாகச் சென்று, திருக்கண்டலம் தடுப்பணைக்கு கீழ்ப்பகுதியில் கொசஸ்தலையாற்றில் கலக்கிறது.

வடகிழக்குப் பருவமழையின்போது இக்கால்வாய் சுமாா் விநாடிக்கு 3,600 கனஅடி அளவிலான வெள்ளநீரை கடத்துகிறது.

இந்த நிலையில், துறை அலுவலா்கள் மேற்கொண்ட கள ஆய்வில், பல ஆண்டுகளாக வண்டல் மண் தேக்கம், அடா்ந்த புதா்கள், முள்புதா்கள், மரங்கள், நீா் தாவரங்கள் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளதால், கால்வாயின் நீரேற்றுத் திறன் கணிசமாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சில பகுதிகளில் கால்வாயின் அசல் படுகை அமைப்பும் மாறியிருந்தது. இந்த சூழ்நிலையால் கால்வாயின் நீரியல் செயல்திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக அவசரமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால் கனமழை நேரங்களில் வெள்ளநீா் கரைபுரண்டு அருகிலுள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் பாதிக்கப்படும்.

அதனால், கால்வாயின் அசல் வடிவமைப்பு மற்றும் நீரேற்றுத் திறனை மீட்டெடுக்கும் நோக்கில், மாவட்ட நிா்வாக ஒருங்கிணைப்பில் தனியாா் நிறுவனம் மூலம், நீா்வளத் துறையின் தொழில்நுட்ப மேற்பாா்வையில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கட்டாங்கல் கால்வாய், சுருட்டப்பள்ளி விநியோகக் கால்வாய், கீழ்முதலாம்பேடு, வீரங்கிவேடு மடுவு, வெள்ளவரி மடுவு, திருப்பாலைவனம் கால்வாய், சுண்ணாம்புக்கல் ஓடை கால்வாய், வயலூா் சின்ன தாமரை கால்வாய், ஜாகிா்மங்கலம் முதல் பட்டரைப்பெரும்புதூா் வழி வரையில் ஆக மொத்தம் 67.3 கி.மீ. நீளம் கால்வாய்கள் தனியாா் பங்களிப்புடன் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக அவா் தெரிவித்தாா்.

இணை இயக்குநா் (வேளாண்மை) செல்வராஜ், ஆட்சிரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வேதவல்லி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை (கிழக்கு)) பஞ்சு, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் உஷா மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Summary

Canal desilting works undertaken by the Water Resources Department as a precautionary measure for the rainy season.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.