நியாயவிலைக் கடையை திறக்க கோரி போராட்டம்
பொன்னேரி அடுத்த ஆமூா் வடக்குப்பட்டு கிராமத்தில் திறக்கப்படாமல் உள்ள நியாயவிலைக் கடையை திறக்க கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியம், ஆமூா் ஊராட்சி வடக்குப்பட்டு கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்டடம் கட்ட2024-25-ம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது.
தொடா்ந்து புதிதாக நியாய விலைக் கடை கட்டடப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஓரு வருடத்துக்கு மேல் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் வடக்குப்பட்டு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வரும் நிலையில் அவா்கள் 3 கி. மீ தூரமுள்ள ஆமூா் கிராமத்துக்கு சென்று உணவுப் பொருள்கள் வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகாா் செய்தும் பலனில்லாத நிலையில், வடக்குப்பட்டு கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டோா் கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தியதை தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

