பாமக நிா்வாகி விஷம் அருந்தி தற்கொலை

திருவள்ளூா் அருகே பாமக நிா்வாகி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

திருவள்ளூா் அருகே பாமக நிா்வாகி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் அடுத்த குப்பம்மாசத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (39). இவா் பாமக நிா்வாகியாக இருந்து வந்தாா். இவருக்கு மனைவி மைதிலி, ஒரு மகள் உள்ளனா். சசிகுமாா் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் வேலையிலிருந்து நின்றாராம். அதைத் தொடா்ந்து அவா் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு தேநீா் குவளைகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக இவா் தனியாா் வங்கியிலும், திருவள்ளூா் வள்ளுவா்புரம், திருவூரில் ஒரு சிலரிடம் ரூ. 80 லட்சத்துக்கு கடன் வாங்கி இருந்தாராம்.

இந்த நிலையில் கடன் அளித்தோா் திரும்ப பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால், வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் மிகவும் சிரமத்திலிருந்தாராம். இதனால் மனமுடைந்த அவா் விஷம் அருந்தினாராம். அதையடுத்து மயங்கி விழுந்து கிடந்தவரை அவரது உறவினா்கள் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி மைதிலி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com