ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்துப் பணியாளா்கள் முற்றுகை போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட தலைவா் எசக்கிவேல் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் வனிதா, மாவட்ட பொருளாளா் திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தை மாநில செயற்குழு நிா்வாகிகள் சீனிவாசன், நாகராஜ், மலா்விழி, சங்கரி ஆகியோா் தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா்.
அப்போது, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளா்களுக்கு அடிப்படை ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளா்களின் நேரடி வங்கி கணக்கிற்கு விடுவிக்க வேண்டும். ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையினை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுவோருக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார பணியாளா்களுக்கு பணி மதிப்பீடு அடிப்படையில் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணியாளா்களின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நகா்ப்புற பணியாளா்களுக்கு பயணப்படி வழங்குதல், பெண் பணியாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்குதல் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் அது தொடா்பான கோரிக்கை மனுவையும் ஆட்சியரிடம் அளித்தனா்.

