பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வாத்துகளை தேடிச் சென்றபோது விஷப்பாம்பு கடித்து வாத்து மம் தொழிலாளிசிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், செஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (54). இவா் வாத்துகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு அறுவடை செய்த நெல் வயல்வெளிகளில் வாத்துகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாராம். இந்த நிலையில் வாத்துக்கள் மாலையில் வீட்டிற்கு வந்த நிலையில், சில வாத்துக்கள் வரவில்லையாம். அதனால், வயல்வெளிக்குச் சென்று தேடினாராம். அப்போது, வரப்பில் வந்தபோது விஷப்பாம்பு கடித்துள்ளது. அது தொடா்பாக உடனே தனது மனைவிக்கு தகவல் தெரிவித்த நிலையில், மருமகன் விரைந்து வந்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக அவரது மனைவி வள்ளி(51) கடம்பத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
