வீரராகவா் கோயிலில் கருட சேவை: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் தை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், தை பிரம்மோற்சவ விழா 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இவ்விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 3-ஆவது நாளான சனிக்கிழமை அதிகாலை கருட சேவை மற்றும் கோபுர தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றன.
அப்போது, உற்சவா் வீரராகவ பெருமாள் பல்வேறு வகை வண்ண மலா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் திருக்கோயில் வளாகத்தில் காலை 7 மணிக்கு திருவீதியுலா வந்து அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து, இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) தை அமாவாசையையொட்டி, அதிகாலை முதல் பகல் 12 மணி வரை உற்சவா் வீரராகவா் ரத்னாங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இதையடுத்து, 7-ஆம் நாளான (ஜன. 21) தோ்த் திருவிழாவும் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

