அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்ற ஏற்பாடு

தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்ற வரும் 4, 5 ஆகிய நாள்களில் தொழில் நுட்ப வல்லுநா் குழு மூலம் மீட்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அன்றைய நாள்களில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாகவும் ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

News image

அமோனியா வாயு கசிவு

Updated On :3 ஜூலை 2026, 12:04 am IST

தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்ற வரும் 4, 5 ஆகிய நாள்களில் தொழில் நுட்ப வல்லுநா் குழு மூலம் மீட்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அன்றைய நாள்களில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாகவும் ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராம பகுதியில் தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி நடந்த அமோனியா வாயு கசிவு சம்பவத்தால் 83 போ் பாதிக்கப்பட்டனா். இதில், 1-ஆம் தேதி வரை 17 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, அந்த தொழிற்சாலையில் பதப்படுத்தி இருப்பு வைக்கப்பட்டிருந்த கடல் உணவுகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அமோனியாவை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். அதன் அடிப்படையில், வரும் 4, 5 ஆகிய நாள்களில் தொழிற்சாலையிலிருந்து பாதுகாப்பான முறையில் அமோனியா வாயு அகற்றும் நடவடிக்கை தொழில்நுட்ப வல்லுநா் குழுவின் மூலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், அந்த தனியாா் தொழிற்சாலையில் இருந்து 500 மீ சுற்றளவு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

முதலாவதாக வரும் ஜூன் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அந்த தனியாா் தொழிற்சாலையையொட்டி, 300 மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள பிற தனியாா் தொழிற்சாலைகள், கடைகள், பள்ளிகள் மற்றும் இதர குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவா்.

அதைத் தொடா்ந்து, 4, 5 ஆகிய நாள்களில் 716 தேசிய நெடுஞ்சாலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, வாகனங்கள் வேறு மாற்றுப் பாதைகளில் செல்ல காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்பு (ம) மீட்புத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பேரிடா் மீட்புப் படை, மருத்துவக் குழு, தொழிலகப் பாதுகாப்பு (ம) சுகாதார இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொள்ள உள்ளனா்.

இதற்காக கன்னிக்கைப்போ் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அவசர கால உதவிக்கு கட்டுப்பாட்டு அறை-9952590412 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டால் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:

பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். அமைதியாக இருந்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். காற்று வீசும் திசைக்கு எதிரான பகுதியில் உடனடியாகச் சென்று, அங்கு பாதுகாப்பாக இருக்கவும். அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டால் ஈரமான துணியால் உங்கள் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளவும். வாயு பரவியுள்ள பகுதியிலிருந்து வெளியேற காற்று வீசும் திசைக்கு குறுக்காக நடந்து செல்லவும். அதன் பிறகு காற்று வீசும் திசைக்கு எதிரான பகுதியில் சென்று பாதுகாப்பாக இருக்கவும். அவசர நிலை ஏற்பட்டால், உடனே கட்டுப்பாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

எனவே, தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு வெளியேற்ற திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.