தேசிய அளவில் விவாதப் பொருளாகவும், தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் மாறியிருக்க வேண்டிய திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் அமோனியா வாயுக் கசிவு உயிரிழப்புகள் கடந்துபோகப்படுவது வியப்பை ஏற்படுத்துகிறது. இதுவரையில் 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; 83 பேர் பாதிக்கப்பட்டு 41 பேர் சிகிச்சை முடிந்து திரும்பினர். சிகிச்சை பெறும் 26 பேரில் 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள்.
வயல்வெளிகளால் சூழப்பட்ட காரனோடையை பெரியபாளையத்துடனும் ஊத்துக்கோட்டையுடனும் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்த "செயின்ட் பீட்டர் அன்ட் பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம்', கடல் உணவுகளைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறது. ஆண்டொன்றுக்கு ரூ. 248 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனம் என்று தெரிகிறது. 1961-இல் கேரளத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 2011-இல் தமிழகத்தில் கால் பதிக்க அப்போதைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவரின் மறைமுக முதலீடும், ஆதரவும் காரணம் என்று சொல்லப்படுகிறது. 2021-இல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திமுக அமைச்சர் ஒருவரும், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் ஆதரவுக் கரம் நீட்ட அந்த நிறுவனம் கடல் கடந்து அசுர வேகத்தில் வளரத் தொடங்கியதாகத் தெரிகிறது.
அதாவது, ஆட்சியாளர்களின் ஆதரவு வெளிச்சத்தில் வளர்ந்த நிறுவனம் என்பது பொருள். இரண்டு ஏக்கர் பரப்பில், நாள் ஒன்றுக்கு சுமார் 50 டன் முதல் 150 டன் வரை கடல் உணவுகளை உறைய வைக்கும் மற்றும் பதப்படுத்தும் நிறுவனம் இது. 1,300 டன் கொள்ளளவு கொண்ட 3 குளிர்பதனக் கிடங்குகளுடனும், 125 டன் கொள்ளளவு கொண்ட 2 குளிர்பதன அறைகளுடனும் இருக்கும் இந்த நிறுவனத்துக்குக் குளிர்பதன வசதியுடன் கூடிய 40 லாரிகள், 2 டிரெய்லர்கள், பதப்படுத்தத் தேவையான ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவையும் இருக்கின்றன.
சென்னை காசிமேட்டில் அதிக அதிநவீன வசதிகளுடன் கூடிய 100-க்கும் அதிகமான விசைப்படகுகளை இந்த நிறுவனம் வைத்திருப்பது போதாதென்று பினாமிகள் பெயரிலும், குத்தகைக்கு எடுத்தும் மேலும் பல விசைப் படகுகளை இயக்குகிறது. தென்னிந்தியாவின் கடலோர மாநிலங்கள் அனைத்திலிருந்தும் கடல் உணவுகளைக் கொள்முதல் செய்கிறது. தமிழக அளவில் கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் இது முன்னணியில் உள்ளது.
இந்த ஆலையில் அஸ்ஸாம், ஒடிஸா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து, முகவர்கள் மூலம் அழைத்துவரப்படும் பெரும்பாலும் பழங்குடியைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பதப்படுத்துவதற்கும், குளிர வைப்பதற்கும் பயன்படுத்தப்படும் அமோனியா வாயுவின் கொள்கலன் அருகே அமைக்கப்பட்டிருக்கிறது தொழிலாளர்கள் தங்கும் அறை. கடந்த ஜூன் 21-ஆம் தேதி காலையில் அந்தக் கொள்கலனில் இருந்து அமோனியா வாயு கசியத் தொடங்கியது. ஏற்கெனவே அவ்வப்போது சிறிய அளவில் அமோனியா வாயு கசிவது வழக்கம் என்பதால் தொழிலாளர்கள் எச்சரிக்கை அடையவில்லை.
இந்த முறை, அதிகரித்த வெப்பம் காரணமாகக் கொள்கலனின் அழுத்தம் அதிகரித்து அமோனியா வாயு வெளியேறும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த 15 நிமிஷங்களில் அதிக அளவில் அமோனியா வாயு கசிந்து அதனால் நிலைகுலைந்த தொழிலாளர்கள் மூச்சுத் திணறலுடன் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். சுதாரித்துக் கொள்வதற்குள் நிலைமை கைமீறிவிட்டிருந்தது.

பல முறை சிறிய அளவில் அமோனியா வாயு கசிந்தபோது, பணிபுரிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் புகார் அளித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நிர்வாகம் அலட்சியம் காட்டியிருந்தது. கடந்த டிசம்பர் மாதம், தொழிற்சாலை பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அமோனியா வாயு செல்லும் குழாய்களில் பழுது மற்றும் பராமரிப்புக் குறைபாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அதையும் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்தால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் சுருங்கி வருவது மட்டுமல்லாமல், முதியோர், குழந்தைகள் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் அது குறித்த புகார்களை சட்டை செய்யவில்லை.
1997, 2013-ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வாயுக் கசிவு ஏற்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபட்டது. ஆனால், இதுபோலக் கொத்துக் கொத்தாக உயிர்கள் பலியாகவில்லை. அப்போது இருந்த ஊடக உற்சாகம், வெளிமாநில பழங்குடியினர் தொழிலாளர்கள் பலியாகி இருக்கும் இந்த விஷவாயுக் கசிவு குறித்து இல்லாதது ஏன் என்பதுதான் புருவம் உயர்த்த வைக்கிறது.
தமிழகத்தில் அபாயகரமான ரசாயனங்களைப் பயன்படுத்தும் 1,774 ஆலைகள் இருக்கின்றன. 60-க்கும் அதிகமான கடல் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








