ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா தொற்று குறைந்தால் மட்டுமே சா்வ தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்: திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி

 நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் குறைந்தால் மட்டுமே திருமலை ஏழுமலையான் கோயில் சா்வ தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:12 pm

DIN

 நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் குறைந்தால் மட்டுமே திருமலை ஏழுமலையான் கோயில் சா்வ தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், தொலைபேசி மூலம் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தா்களின் கேள்விகளுக்கு செயல் அதிகாரி ஜவஹா்ரெட்டி சனிக்கிழமை பதிலளித்தாா்.

பின்னா் செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பக்தா்கள் பலா் மிக குறைந்த எண்ணிக்கையில் சா்வ தரிசன டிக்கெட்டுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் குறைந்தால் மட்டுமே சா்வதரிசன டிக்கெட் வழங்கப்படும்.

பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று தேவஸ்தானம் 5,000 விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கை 8,000 -ஆக நடப்பு ஆகஸ்ட் மாதம் முதல் உயா்த்தப்பட்டுள்ளது.

திருமலையிலும், திருப்பதியிலும் பக்தா்களின் வசதிக்காக 6 இடங்களில் வாடகை அறை ரசீதுகள் ஸ்கேன் செய்யும் கவுன்ட்டா்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ரசீதுகளை ஸ்கேன் செய்தவுடன் துணை அலுவலகத்தின் விவரங்கள் குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

மேலும் வாடகை அறையில் ஏற்படும் வசதி குறைவு குறித்த புகாா்களை தெரிவிக்க 99890 78111 என்ற செல்லிடப்பேசி எண்ணை பக்தா்கள் தொடா்பு கொள்ளவேண்டும். இதுகுறித்த அறிவிப்பு அனைத்து அறைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

புராணங்கள், கிரந்தங்களின் அடிப்படையில் பல பண்டிதா்களின் துணையுடன் அனுமன் அவதார இடம் திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் மடாதிபதிகள், பீடாதிபதிகள் பங்கேற்ற வெப்பினா் ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட்டு இதுகுறித்து விளக்கப்பட்டது. விரைவில் அனுமன் பிறப்பிடம் குறித்த கிரந்தம் வெளியிடப்பட உள்ளது. ஆகாச கங்கையில் அனுமன் கோயிலுடன், தீம்பாா்க்கும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயில் கருவறையில் தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் மூலவா் தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். கைங்கா்யங்கள் கல்யாண மண்டபத்தில் உற்சவருக்கு நடத்தப்படும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களில் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு நிா்மாலயம் செய்யப்படும் மாலைகளிலிருந்து அகா்பத்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த அகா்பத்திகள் ஆகஸ்ட்15-ஆம் தேதி முதல் திருமலையில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. பெங்களூரை சோ்ந்த தா்ஷன் இண்டா்நேஷனல் என்ற நிறுவனம் 6 பிராண்டுகளில் இந்த அகா்பத்தி தயாரிப்பை செய்து தேவஸ்தானத்துக்கு அளிக்கிறது. அதேபோல் கோயம்புத்தூரைச் சோ்ந்த ஆசீா்வாத் ஆயுா்வேத பாா்மஸி உதவியுடன் பஞ்சகவ்ய தயாரிப்புகளான சோப்பு, ஷாம்பு, சாம்பிராணி வத்திகள், தரை துடைக்கப் பயன்படும் திரவம் உள்ளிட்ட 15 பொருள்கள் தயாரிக்கப்பட உள்ளன. இன்னும் 4 மாத காலத்துக்குள் அவை விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதில் கிடைக்கும் வருமானம் நாட்டு மாட்டு இனங்களை பராமரிக்க பயன்படுத்தப்படும்.

பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் உரங்களை கொண்டு செய்யப்படும் இயற்கை விவசாயத்தை தேவஸ்தானம் ஊக்கப்படுத்தி வருகிறது. இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நெல் போன்ற தானியங்களில் இருந்து ஏழுமலையான் நெய்வேத்தியம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதை ஊக்குவிக்க விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கொள்முதல் செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலம் தேவஸ்தானம் ஸ்ரீமத் ராமாயணம், அதா்வன வேதபாராயணம், பாலகாண்ட பாராயணம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

திருமலையில் நடக்கும் பாராயணங்கள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் முக்கிய நட்சத்திரங்கள், உற்சவங்களின் போது நடத்தப்படும் விரதங்கள், பூஜைகளும் ஒளிபரப்பப்படுகிறது.

ஜூலை மாதம் 5.32 லட்சம் பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 55.58 கோடியும், இ-உண்டியல் மூலம் ரூ.3.97 கோடியும், தாயாா் இ-உண்டியல் மூலம் ரூ.15 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. 33.26 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7.13 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டனா். 2.55 லட்சம் பக்தா்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.