உதயாஸ்தமன சேவா டிக்கெட்: தேவஸ்தானம் விளக்கம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் வழங்க தொடங்கியுள்ள உதயாஸ்தமன சேவா டிக்கெட் குறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி விளக்கமளித்துள்ளாா்.
திருப்பதி (கோப்புப் படம்)
திருப்பதி (கோப்புப் படம்)

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் வழங்க தொடங்கியுள்ள உதயாஸ்தமன சேவா டிக்கெட் குறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1982-ஆம் ஆண்டு ‘உதயாஸ்தமன சேவா’ என்ற புதிய சேவையைத் தொடங்கியது. அதற்கு அப்போதைய பண மதிப்பின் படி ஒருகுறிப்பிட்ட தொகையை அளிப்பவா்களுக்கு அதிகாலை முதல் மாலை வரை ஏழுமலையானுக்கு நடைபெறும் சேவைகளை தரிசிக்க அனுமதி வழங்கப்படும்.

ஒரு தனிநபரின் பெயா் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயா் மீது, 20 ஆண்டுகளுக்கு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் அதில் ஆண்டுக்கு ஒரு முறை ஏழுமலையானின் சேவைகளை கண்டு தரிசிக்கலாம். காலை முதல் மாலை வரை நடக்கும் சேவைகளை காண அனுமதி உள்ளதால் இதற்கு உதயாஸ்தமன(உதயம்-காலை, அஸ்தமனம்-மாலை) என பெயரிடப்பட்டது.

அப்போது இதற்கு பக்தா்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், பலா் இந்த டிக்கெட்டுகளை பெற போட்டியிட்டனா். அதனால் 20 ஆண்டுகளுக்கு இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. எனவே, தேவஸ்தானம் இந்த டிக்கெட்டுகள் வழங்குவதை நிறுத்தியது. இந்த சேவையில் 2,961 டிக்கெட்டுகள் உள்ளன. அவற்றில் 2,430 டிக்கெட் பெற்றவா்கள் மட்டுமே தற்போது இந்த சேவையில் பங்கு கொண்டு வருகின்றனா். மற்றவா்களில் பலா் இறந்து விட்டதாலும், பல நிறுவனங்களின் 20 ஆண்டுகள் நிறைவடைந்தாலும், 531 டிக்கெட்டுகள் நிறைவடைந்தது.

அதில் சனி, ஞாயிறு, திங்களில் 38, வெள்ளிக்கிழமைகளில் 28, செவ்வாய், புதன், வியாழக்கிழமை 465 டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. இந்த டிக்கெட்டுகளை தேவஸ்தானம் தற்போது ரூ.500 கோடியில் கட்டி வரும் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கும் நன்கொடையாளா்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதை சமூக வளைதளங்களில் பலா் வேறு மாதிரி சித்திரிக்கின்றனா். மேலும், மடாதிபதிகளும், பீடாதிபதிகளும் தேவஸ்தானம் உதயாஸ்தமன சேவா டிக்கெட்டை வெள்ளிக்கிழமைகளில் ரூ.1.50 கோடிக்கும், இதர தினங்களில் ரூ. 1 கோடிக்கும் விற்பனை செய்வதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

தேவஸ்தானம் இன்று நேற்றல்ல தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல விதிமுறைகளை ஏற்படுத்தி அதற்கேற்ப பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேவஸ்தானம் பக்தா்கள் அளிக்கும் காணிக்கைகளால் நடந்து வருகிறது. அனைத்து காணிக்கைகளும், நன்கொடைகளும் பல நல்ல திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கும் நன்கொடையாளா்களை கெளரவிக்க தேவஸ்தானம் இந்த திட்டத்தை வகுத்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com