திருப்பதியில் நாளை தென்மண்டல குழு கூட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதியில் நாளை(ஞாயிறு) நடக்கவுள்ள தென் மண்டல குழுவின் 29வது கூட்டத்தை முன்னிட்டு திருப்பதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதியில் நாளை தென்மண்டல குழு கூட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதியில் நாளை(ஞாயிறு) நடக்கவுள்ள தென் மண்டல குழுவின் 29வது கூட்டத்தை முன்னிட்டு திருப்பதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்துத்துறைகளிலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சி அடைய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் போட்டித்தன்மை மிக்க கூட்டாட்சி முறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய ஒத்துழைப்பு தொடர் பேச்சுவார்த்தைகள், கூட்டங்கள் மூலமே சாத்தியமாகும். அதற்காக ஏற்படுத்தப்பட்டதே மண்டல குழுக்கள். இதுபோல், தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென் மண்டல குழு. திருப்பதியில் உள்ள தாஜ் ஓட்டலில் நாளை(ஞாயிறு) மாலை 3 மணியளவில் தென் மண்டல குழுவின் 29வது குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் மேல் குறிப்பிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த முதல்வர்கள், லெப்டினட் ஆளுநர்கள், நிதியமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், தலைமை செலயர்கள் என, 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இதில் தென் மண்டல குழுவில் உள்ள மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறித்த, 48 அம்சங்கள் மீது விவாதம் நடக்க உள்ளது. அதற்காக திருப்பதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி விமான நிலையத்திலிருந்து, தாஜ் ஓட்டல் வரையில் உள்ள சாலைகள் இஸட் பிரிவு பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. திருப்பதியில் இன்று நடக்கவுள்ள கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமை ஏற்க உள்ளார். அவருடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, உள்ளிட்டோரும் புதுச்சேரி மாநில லெப்டினட் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், முதல்வர் ரங்கசாமி, லட்சதீவுகள் அட்மின்ஸ்டர் பிரபுல் பட்டேல், அந்தமான் நிக்கோபார் தீவின் லெட்டினட் ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

அதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை மாலை, 7 மணிக்கு தனி விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்திற்கு வந்தார். அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி மரியாதை அளித்து வரவேற்று கூட்டம் நடக்கவுள்ள தாஜ் ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு கூட்டத்திற்காக செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆந்திர முதல்வர் ஆய்வு செய்தார். பின்பு, இரவு அமராவதிக்கு புறப்பட்டு சென்றார். சனிக்கிழமை இரவு ஓட்டலில் தங்கும் அமித்ஷா இன்று(ஞாயிறு) காலை நெல்லுார் வெங்கடாபுரத்தில் சொர்ணபாரதி அறக்கட்டளை சார்பில் நடக்கவுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் நாட்டின் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவும் கலந்து கொள்ள உள்ளார். நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மீண்டும் மதியம், 1 மணியளவில் தென் மண்டல குழு கூட்டத்தில் தலைமையேற்க அமித்ஷா திருப்பதிக்கு வருகிறார். அமித்ஷாவை வரவேற்று பின்பு, சனிக்கிழமை இரவு அமராவதி புறப்பட்டு சென்ற ஆந்திர முதல்வர் இன்று(ஞாயிறு) மதியம் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பதிக்கு வர உள்ளார். 

தெலுங்கானாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதால் அம்மாநில முதல்வருக்கு பதில் அம்மாநில உள்துறை அமைச்சர் அல்லது தலைமை செயலர் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அந்தமான்& நிக்கோபார் லெப்டினட் ஆளுநர் டிகே ஜோஷி மற்றும் லட்சதீவுகள் அட்மினிஸ்ட்ர் பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் சனிக்கிழமை மாலை திருப்பதிக்கு வந்தனர். அவர்களை ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட பொறுப்பு உள்துறை அமைச்சர் கெளதம் ரெட்டி அரசு மரியாதை அளித்து வரவேற்றார். மற்ற மாநில முதல்வர்கள், ஆளுநர்களின் வருகை குறித்து உறுதிபடுத்தப்பட வில்லை. எனவே, இதில் ஒரு சில மாநில முதல்வருக்கு பதில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. 

கூட்ட நிகழ்ச்சி நிரல் திருப்பதியில் உள்ள தாஜ் ஓட்டலில் தென் மண்டல குழு கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இதில் பங்கு கொள்ள வரும் அனைத்து முக்கிய பிரமுகர்களையும் ஆந்திர முதல்வர் பொன்னாடை அணிவித்து மலர்செண்டு அளித்து வரவேற்று நினைவு பரிசு அளிக்க உள்ளார். பின்பு கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை அளிக்க உள்ளார். அவருக்கு பின்பு மாநில முதல்வர்களும், ஆளுநர்களும் முன்னுரையாற்ற உள்ளனர். பின்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடக்க உரையாற்ற உள்ளார். பின்பு, மாலை 3.52 மணிமுதல் 6.45 மணி வரை, 48 அம்சங்கள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவுரையும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி நன்றியுரையும் கூறி கூட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர். பின்னர் அனைவரும் தாஜ் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் கலந்து கொள்கின்றனர்.

கூட்ட நிறைவுக்கு பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரவு தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார். நாளை(திங்கள்)காலை திருமலைக்கு சென்று அவர் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். தரிசனம் முடித்து மீண்டும் திருப்பதி விமான நிலையத்திற்கு சென்று தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்ல உள்ளார். தென்மண்டல குழு கூட்டத்தை ஒட்டி, கூட்டம் நடக்கும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் போலீசாரின் பாடி வார்ன் கேமராக்களுடன் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சுமார் 3000 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மாவட்டத்திற்குள் வரும் ஒவ்வொரு வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மெட்டல் டிடெக்டர்கள் மூலம் ஓட்டல் வளாகங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் போலீஸ் சோதனைச் சாவடிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி நகர்புற காவல் கண்காணிப்பாளர் வெங்கட அப்பல நாயுடு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com